வடக்கின் அனைத்து பாடசாலைகளும் இரு நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிப்பு

வட மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளும் நாளைய தினமும், நாளை மறுதினமும் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்த பிரதேசம் புரெவி சூறாவளியாக வலுவடைந்துள்ள நிலையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை வரை மூடப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் நேற்றைய தினமே அறிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே வடக்கின் அனைத்து பாடசாலைகளும் இரு தினங்களுக்கு மூடப்படுவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக ஏதேனும் அவசர தேவைகள் காணப்படுமாயின் 117 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • Recent
Scroll to top