உயர்தரத்தில் கோட்டைவிட்ட 45 பேர் விரைவில் மருத்துவர்களாக?

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தி அடையாத 45 பேர் விரைவில் மருத்துவர்களாக கடமையாற்ற உள்ளனர் என ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிங்கள வார இதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் டொக்டர் ஹரித அலுத்கேவும் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

குறைந்தபட்ச தகுதி தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை மருத்துவ சபை அதனை மீறி எவ்வாறு செயற்பட முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மருத்துவர்களாகக் கடமையாற்ற அனுமதிக்குமாறு விண்ணப்பித்துள்ள 98 பேரில் 45 பேர் குறைந்தபட்ச உயர்தரபரீட்சை சித்தி தகுதியை எட்டாதவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த 45 பேரில் ஏழு பேர் உயர்தரப் பரீட்சைக்கே தோற்றாதவர்கள் எனவும் மேலும் ஏழு பேர் உயர்தரப் பரீட்சையில் மூன்று பாடங்களிலும் சித்தி எய்தாதவர்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும் 13 பேர் குறைந்தபட்சம் ஒரு பாடத்தில் சித்தி எய்த தவறியவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 பேர் சில பல்கலைக்கழகங்களில் கல்வி கற்றுள்ளதுடன் அவை இலங்கை மருத்துவ சபையினால் அங்கீகரிக்கப்பட்டவை அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகாமைத்துவ உதவியாளர் பதவி வெற்றிடத்திற்காக விண்ணப்பம் கோரப்படும் போதும் உயர்தரத்தில் சித்தி அடைந்திருக்க வேண்டுமெனக் கோரப்படும் நிலையில், இலங்கை மருத்துவ சபை எதேச்சாதிகார போக்கில் செயற்பட்டு வருகின்றது என டொக்டர் ஹரித அலுத்கே குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவராக இலங்கையில் கடமையாற்றுவதற்கு உயர்தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானம், இரசாயனவியல் மற்றும் பௌதீகவியல் ஆகிய மூன்று பாடங்களில் இரண்டு சீ சித்தி மற்றும் ஒரு எஸ் சித்தி அவசியமானது என வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் மருத்துவ படிப்பைப் பூர்த்தி செய்தவர்கள் இலங்கை மருத்துவசபையின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டாலே இலங்கையில் மருத்துவராகக் கடமையாற்ற முடியும்.

  • Recent
Scroll to top