சுகாதார சேவை பரிந்துரைகளை புறந்தள்ளி பாடசாலைகளை ஆரம்பித்தமை தொடர்பில் கேள்வி

இலங்கையில் கொரோனா தொற்றுநோய் அதிகரித்து வரும் நிலையில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பரிந்துரைகளை புறக்கணித்து பாடசாலைகளை ஆரம்பித்தமை தொடர்பில், தேசிய தொற்று நோய்த் தடுப்பு மையத்திடம், நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கங்களில் ஒன்று கேள்வி எழுப்பியுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவது தற்போது மூன்றாம் நிலையில் இருப்பதாக, கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அரசாங்க தரப்பினர் பங்குபற்றிய கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் நேற்றுமுன்தினம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த கலந்துரையாடலில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, கொரோனா தொற்றை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர், பதில் பாதுகாப்புப் படைகளின் பிரதானி, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன ஆகியோர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தொடர்பான சுகாதார பரிந்துரைகள் தொடர்பாக நவம்பர் 8ஆம்திகதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவலின் நான்கு நிலைகளை ஒவ்வொன்றாக அவதானிக்க வேண்டிய விதம் குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக ஆசிரியர் சங்கத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய, கொரோனா மூன்றாம் நிலை பரவலின் போது பாடசாலைகள் மூடப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மூன்றாம் நிலை பரவலின்போது பாடசாலைகள் மூடப்பட வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்ட சுகாதார பரிந்துரைகளில் தெளிவுப்படுத்திய போதிலும், கல்வி அமைச்சு எவ்வித முன்னேற்பாடுகளையும், சுகாதார நடைமுறைகளையும் மேற்கொள்ளாமல், மாகாணம் மற்றும் பிற தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளையும் தவிர ஏனைய பிரதேசங்களில் கடந்த 23ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பித்துள்ளதாக, ஆசிரியர் சங்கத்தின் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பரிந்துரைகள் இவ்வாறு அமைந்துள்ளபோதிலும், பாடசாலைகளை ஆரம்பித்து நடத்திச் செல்வதும் தவறான செயற்பாடு என சுட்டிக்காட்டியுள்ள ஆசிரியர் சங்கம், இத்தகைய முரண்பாடான நிலைமை காரணமாக, சுமார் 4.3 மில்லியன் மாணவர்களும், 247,000 ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உள்ளிட்ட கல்வி அமைப்பு ஆபத்தினை எதிர்நோக்கியுள்ளதாகவும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த சூழலில், பாடசாலைகளை ஆரம்பிப்பது மற்றும் நடத்திச் செல்வது தொடர்பான சர்ச்சைகள் தொடர்பாக கொரோனா பரவுவதைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்திடம், இலங்கை ஆசிரியர் சங்கம் உடனடி விளக்கம் கோரியுள்ளது.

  • Recent
Scroll to top