கன்னி – 2020 குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்

கன்னி:

கன்னி ராசிக்கு ஒரு மேன்மையான ஒரு காலகட்டத்தை தரக்கூடிய குருபெயர்ச்சி ஆரம்பித்திருக்கிறது.

கடந்த காலங்களில் உங்களுக்கு கோசார அமைப்புகளில் எந்த நல்ல பலன்களும் நடக்கவில்லை. குருவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக சாதகமற்ற இடங்கள் என்று சொல்லப்படக்கூடிய மூன்று மற்றும் நான்காம் இடங்களில் அமர்ந்து நல்ல பலன்களை தர இயலாத நிலைமையில் இருந்தார்.

இந்த குருப் பெயர்ச்சியின் மூலம் இதுவரை கன்னி ராசிக்காரர்களுக்கு எந்த விதமான பாக்கியங்கள் கிடைக்கவில்லையோ அந்த பாக்கியங்கள் அனைத்தும் தடையின்றி கிடைக்கும்.  மேலும் பிறந்த ஜாதகப்படி தசாபுக்தி அமைப்புகளும் நல்லவிதமாக கைகொடுக்கும் நிலையில் இருந்தால் இது தொட்டது துலங்கும் காலமாகவும், புதிய உச்சத்தை தொடும் காலமாகவும் அமையும்.

ஐந்தில் குரு, மூன்றில் கேது என்கிற நிலைமை மிகவும் அரிதாகவே வரும் ஓர் அமைப்பு என்பதால் இதுவரை எந்த விஷயத்தில் தடங்கல்கள் தடைகள் உங்களுக்கு இருந்து வந்ததோ அவை அனைத்தும் தீர்ந்து நல்லதொரு முன்னேற்றமான ஒரு காலத்தை கன்னி ராசியினர் அடையப்போகிறீர்கள்.

குரு தன்னுடைய பார்வையால் ராசியைப் பார்க்கும் காலம் அனைத்து மனிதர்களுக்கும் யோகம் தரக்கூடிய ஒரு அமைப்பாக வேத ஜோதிடத்தில் வலியுறுத்தப்படுகிறது.

அதிலும் அவரது 9-ஆம் பார்வை மிகவும் விசேஷமானது என்கின்ற ஒரு நிலைமையில், தன்னுடைய ஒன்பதாம் பார்வையாக உங்கள் ராசியை இன்னும் 13 மாத காலத்திற்கு பார்க்கப் போவதாலும், மூன்றில் கேது இருப்பதாலும்  கன்னிக்கு முயற்சி இன்றியே அனைத்து விஷயங்களும் கிடைக்கும் ஒரு காலகட்டம் இது.

ராசியை குரு பார்ப்பதால் உங்களின் மனம் மிகுந்த புத்துணர்ச்சியுடன் இருக்கும். முகம் பொலிவு பெறும். அனைத்து விஷயங்களையும் ஆக்கபூர்வமாகச் சிந்தித்து நன்கு செயல்படுவீர்கள். சிந்தனை செயல்திறன் நன்றாக இருக்கும் என்பதால் இம்முறை அதிர்ஷ்டம் தங்களின் பக்கத்தில் இருப்பதைப் போல உணர்வீர்கள். எல்லா விதங்களிலும் நன்மைகளை மட்டுமே தரக்கூடிய ஒரு பெயர்ச்சி இது.

குருவின் இருப்பைவிட பார்வை பலமே மிகவும் நல்லதாக  சொல்லப்படுகிறது. ஐந்தாம் இடத்தில் இருக்கும் குரு தனது 5ம் பார்வையால் பாக்கியஸ்தானம் என்று சொல்லப்படக்கூடிய ஒன்பதாம் இடத்தைப் பார்ப்பார்.

பாக்கிய ஸ்தானம் என்பது அவரவருடைய வயதிற்கு ஏற்றார் போல திருமண பாக்கியம், புத்திர பாக்கியம், மற்றும் தொழில் அமைப்புகளை கொடுக்கக்கூடியது. எனவே இதுவரை அவரவர் தகுதிக்கேற்ப உங்களுக்கு என்னென்ன பாக்கியங்கள் கிடைக்கவில்லையோ அந்த பாக்கியங்கள் அனைத்தும் கிடைப்பதற்கு குரு துணையிருப்பார்.

இந்த அமைப்பின் மூலம் இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். புத்திரபாக்கியம் கிடைக்காதவர்களுக்கு குழந்தை பிறக்கும். நல்ல வேலை இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு மனதிற்கு பிடித்த நல்ல வேலை அமையும்.

5ஆம் இடத்தில் இருந்து 11-ஆம் வீட்டைப் பார்க்கும் குருவால் லாப ஸ்தானம் வலுப்பெறுகிறது. இதுவரை வேலை தொழில் போன்ற அமைப்புகளில் அதிகமாக உழைத்தும் அதற்கேற்றார்போல கூலி கிடைக்காதவர்கள், சிரமத்திற்கு ஏற்ற பொருளாதார மேன்மை பெறாதவர்களுக்கு இம்முறை மிகச்சிறந்த நல்ல பலன்கள் இருக்கும்.

தொழில் இடங்களில் உங்களுடைய திறமைகள் மற்றவர்களால் அங்கீகரிக்கப்படும் காலகட்டம் இது. இதுவரை கடுமையான முயற்சி செய்தும் சம்பள உயர்வு பதவி உயர்வு போன்றவற்றை பெறாதவர்கள் இந்த குருப்பெயர்ச்சியின் மூலம் இவையிரண்டும் உங்களை தேடி வர பெறுவீர்கள்.

லாப ஸ்தானத்தைப் பார்க்கும் குருவால் தொழில் வியாபாரம் போன்றவைகளில் இலாபம் நிறைவாக வரும். குறைந்த முதலீட்டில் தொழில் செய்பவர்களுக்கு கூட இதுவரை கிடைக்காத மிகப் பெரிய லாபம் கிடைக்கும். எனவே இம்முறை கன்னி  ராசிக்காரர்களின் பொருளாதார நிலைமை சொல்லிக்கொள்ளும்படியாக இருக்கும் என்பது உறுதி.

குரு தனது 9ம் பார்வையால் உங்கள் ராசியை பார்ப்பதால் உங்களுடைய எண்ணங்கள் அனைத்தும் பலிக்கும் காலகட்டம் இது. உடலிலும் மனதிலும் புதுத் தெம்பு பிறக்கும். எங்கும் எதிலும் உற்சாகமாக இருப்பீர்கள். நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும். எந்த ஒரு செயலையும் உடனுக்கு உடன் நிறைவேற்ற முடியும். வாக்குப் பலிதம் ஏற்படும்.

இதுவரை நடக்காமல் இருந்த நல்ல விஷயங்கள், தாமதமாகிப் போனவைகள் உடனடியாக நடந்து உங்களுக்கு மகிழ்ச்சியையும், வருமானத்தையும், புகழையும் தரும். தன்னம்பிக்கை மனதில் குடி கொள்ளும். கௌரவம், அந்தஸ்து கூடும்படியான சம்பவங்கள் நடக்கும். கையில் பணப் புழக்கம் அதிகரித்து குடும்பத்தில் உங்களுடைய சொல்லை அனைவரும் கேட்கும் நிலை உருவாகும்.

சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் இருந்த முட்டுக்கட்டைகளும் அதிருப்தியான நிலைமையும் மாறி தொழில் சூடு பிடிக்கும். வேலை செய்பவர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள். தொழில் முன்னேற்றம் மற்றும் விரிவாக்கத்திற்கான அனைத்தையும் தற்போது நல்ல விதமாகச் செய்ய முடியும். தடைகள் அனைத்தும் நீங்குவதால் ஊக்கத்துடன் செயல்படுவீர்கள்.

வியாபாரிகளுக்கு இது லாபங்கள் வரக்கூடிய காலகட்டமாக அமையும். எல்லா விதமான வியாபாரமும் இப்போது கை கொடுக்கும். கிளைகள் திறக்கலாம். புதிய டீலர்ஷிப் எடுக்கலாம். வருமானம் சிறப்பாக இருக்கும். தொழிலில் பங்குதாரர்களை சேர்த்துக் கொள்வதற்கு இது நல்ல நேரம். அவர்கள் மூலம் முன்னேற்றங்கள் இருக்கும்.

சில தொழில் முனைவோர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் கிடைத்து அமோகமான தொழில் வெற்றியைப் பெற்று பெரும் பணக்காரர்கள் ஆவதற்கு தற்போது வாய்ப்பு இருக்கிறது. விடா முயற்சியுடன் எதையும் செய்வதன் மூலம் கடவுள் அருள் உங்கள் பக்கம் இருக்கும் என்பது நிச்சயம்.

புதிதாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்கள் படிப்புக்கும் தகுதிக்கும் ஏற்ற பொருத்தமான வேலை அமையும். உயர் கல்வி கற்பதற்கு இதுவரை இருந்து வந்த தடைகள் அனைத்தும் விலகும். அரியர்ஸ் வைத்திருப்பவர்கள் நல்லபடியாக அனைத்தையும் கிளியர் செய்வீர்கள்.

அரசு வேலை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. மத்திய மாநில அரசுகளின் முதன்மைத் தேர்வுகளான ஐ.ஏ.எஸ், குரூப்ஒன் போன்ற பதவிகளுக்கு நல்லமுறையில் தேர்வுகளை எழுத முடியும். ஏற்கனவே அரசு, வங்கி போன்ற தேர்வுகளை எழுதி முடிவுகளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.

திருமணமாகாத இளைய பருவத்தினருக்கு திருமண காலம் கூடி வந்து விட்டது. தடைகள் நீங்கி வரன்கள் கூடிவந்து திருமணம் நடக்கும். காதலித்துக் கொண்டிருந்தவர்களுக்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும். ஒரு சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பித்து தங்களின் வாழ்க்கைத் துணைவரை அடையாளம் காண்பீர்கள். முதல் வாழ்க்கையில் சிக்கல்கள் தோன்றி கோர்ட், போலீஸ் என்று அலைந்து விவாகரத்து பெற்றவர்களுக்கு இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாக அமையும்.

சனியின் ஐந்தாமிட இருப்பால் மகன் மகள் விஷயத்தில் இதுவரை இருந்து வந்த மனக்கவலைகள் இனிமேல் இருக்காது. பிள்ளைகள் விஷயத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். கூட்டுக் குடும்பத்தில் பெரியவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் செய்ய வேண்டிய கடமைகளை நல்லவிதமாக செய்ய முடியும். வயதானவர்கள் தாத்தா பாட்டியாக பதவி உயர்வு பெறுவீர்கள்.

சொந்த வீடு கட்டுவதற்கு இருந்து வந்த தடைகள் விலகும். வீடு கட்ட ஆரம்பித்து பாதியில் நிறுத்தி இருந்தவர்கள் நல்ல விதமாக வேலையை முடித்து கிரகப் பிரவேசம் செய்வீர்கள். சிலருக்கு கட்டிய வீடோ, காலிமனையோ வாங்குவதற்கு இப்போது நல்ல சந்தர்ப்பம் வரும். புதிதாக நல்ல வாகனம் வாங்குவீர்கள். இருக்கும் வாகனத்தை விட விலை உயர்ந்த வாகனம் வாங்க முடியும். குடும்பத்தில் சொத்து சேர்க்கை மற்றும்  நகை சேர்க்கை இருக்கும்.

கணவன் மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் இருக்கும். மனைவிக்கு நகை வாங்கி கழுத்தில் போட்டு அழகு பார்க்க முடியும். குழந்தைகளின் எதிர் காலத்துக்கு முதலீடு செய்ய முடியும். பிள்ளைகள் விரும்பிய பள்ளி, கல்லூரிகளில் அவர்களை சேர்க்க முடியும்.

பொதுவில் கன்னி ராசிக்கு மிகவும் நன்மை தருகின்ற ஒரு குருப்பெயர்ச்சி இது. இனிமேலும் தயங்காமல் முன்னேற்றத்திற்கான முயற்சிகளை எடுக்க வேண்டிய தருணம் இது.

பரிகாரங்கள்:

குருவின் திருவருளை முழுமையாகப் பெற உங்களின் ஜன்ம நட்சத்திர தினம் அல்லது ஒரு வியாழக்கிழமை அன்று குரு ஹோரையில் குருவின் வாகனமான யானைக்கு அதன் விருப்பமான உணவு என்ன என்று பாகனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு அதற்குப் பிடித்த உணவினைத் தந்து அதன் ஆசிகளைப் பெறுங்கள். 

  • Recent
Scroll to top