டம்மி ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுத்து 3 கோடி சுருட்டிய வவுனியா வடக்கு வலய மூவர்

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் பெரும் நிதி ஊழல் மோசடி இடம் பெற்றதாகத் தெரிவித்து மாகாண கல்வித் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் நிதிக்கிளையில் பணியாற்றிய சிலர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளமை ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த பல மாதங்களாக இந்த நிதி மோசடி இடம் பெற்று வந்த நிலையில், தற்போது குறித்த நிதிக்கிளையில் பணியாற்றிய நபர் ஒருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டு புதிய உத்தியோகத்தர் ஒருவர் கடமையேற்ற நிலையிலேயே குறித்த விடயம் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான விசாரணைகள் முழுமையாக தற்போது இடம்பெற்று வருகின்றன.

மேலும் தெரியவருவதாவது,

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் சுமார் 3 கோடிக்கு மேல் இடம் பெற்றுள்ள நிதி மோசடி தொடர்பில் தற்போது விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்நிதி மோசடி தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் வந்த வண்ணமுள்ளது.

2017 ஆம் ஆண்டிலிருந்து இடம்பெற்று வந்துள்ள இந்நிதி மோசடியினை கடந்த வெள்ளிக்கிழமை (30.10.2020) வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் கணக்காளர்ப்பிரிவில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள முகாமைத்துவ உதவியாளர் தனது கடமையின் போது கண்டு பிடித்து வலயக்கல்விப்பணிப்பாளர் மற்றும் கணக்காளர் ஆகியோருக்கு தெரியப்படுத்தியதன் அடிப்படையில் விரைந்து செயற்பட்டதன் அடிப்படையில் தற்போது விசாரணைகள் முடக்கிவிடப்பட்டுள்ளன.

குறித்த நிதி மோசடி மிகவும் சூட்சுமமான முறையில் இடம்பெற்று வந்துள்ள நிலையில் வலயக்கல்வி பணிமனையின் மூன்று உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படும் நிலையில் அவர்களில் முக்கிய சூத்திரதாரி சந்தேகத்தில் கைது செய்யப்படலாம் என அறிய முடிகின்றது.

குறித்த மோசடிக்கு வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் ஆசிரியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் சம்பள விடயத்திற்குப் பொறுப்பாக இருந்த உத்தியோகத்தர் குறித்த விடயத்தினை மேற்கொள்வதற்கு தன்னுடன் பணியாற்றிய முகாமைத்துவ உதவியாளர்கள் இருவரைப் பயன்படுத்தியுள்ளார் எனச் சந்தேகத்தின் அடிப்படையிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்விசாரணையின் பிரகாரம் நிதி மோசடி செய்வதற்கு வவுனியா வடக்கு வலயத்தில் சேவையில் இல்லாத சிலரது பெயர்களைப் பயன்படுத்தி அவர்களை ஆசிரியர்கள் என்ற ரீதியில் பிரதிபலித்து சம்பளப்பட்டியலில் முதலில் இணைத்துள்ளனர்.

இவ்வாறு இணைக்கப்பட்டவர்களுக்கு மாதாந்தம் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வந்துள்ளது.

இக்கொடுப்பனவுகள் ஒரே சம்பள அளவுத்திட்டத்தில் இருந்திருக்கவில்லை. அவை மாறுபட்டவையாகக் காணப்பட்டுள்ளது. இது சந்தேகத்தினை வரவழைக்காமல் இருப்பதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கலாம்.

இவ்வாறு போலியாகத் தயாரிக்கப்பட்ட ஆசிரியர்களின் சம்பள பட்டியலிற்கான கொடுப்பனவுகள் குறித்த உத்தியோகத்தர் மற்றும் அவரது நண்பரின் வங்கிக் கணக்குகளுக்கு மாதாந்தம் வைப்பிலிடப்பட்டு வந்துள்ளது.

இதற்கு அவருடன் பணியாற்றிய இரு முகாமைத்துவ உதவியாளர்களும் உதவியாக இருந்துள்ளனர்.

இந்நிலையில் பிரதான சூத்திரதாரியான குறித்த உத்தியோகத்தர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் இடமாற்றம் பெற்று சுகாதார திணைக்களத்திற்குச் சென்றுள்ள நிலையிலும் போலியாக உருவாக்கப்பட்ட குறித்த சம்பள பட்டியலின் ஊடாக பணம் வங்கியில் வைப்பிலிடப்பட்டு வந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

அண்மையில் முகாமைத்துவ உதவியாளர்கள் மாற்றப்பட்டு சம்பள விடயத்திற்கு புதிய முகாமைத்துவ உதவியாளர் நியமிக்கப்பட்ட நிலையில் அவரினால் குறித்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக வலயக்கல்விப்பணிப்பாளருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக வலயக்கல்விப்பணிப்பாளரால் மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்குத் தனது வலயத்தில் நடைபெற்ற நிதி மோசடி தொடர்பாகத் தெரியப்படுத்தப்பட்ட நிலையில் மேலதிகமாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருக்கும் வலயக்கல்விப்பணிப்பாளர் மற்றும் வலயக்கல்வி அலுவலகத்தின் கணக்காளரினால் குறித்த விடயம் தெரியப்படுத்தப்பட்டது.

இதற்கு மேலதிகமாக வவுனியா பொலிஸில் வலயக்கல்விப்பணிப்பாளரினால் முறையிடப்பட்ட நிலையில் நிதி மோசடிப்பிரிவிலும் முறைப்பாடு செய்யப்பட்டதன் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் வட மாகாண கணக்காய்வாளர் திணைக்களம் மற்றும் வடக்கு கல்வித்திணைக்கள கணக்காய்வு குழுவும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் வவுனியா வடக்கு கல்வி வலயப்பணிப்பாளர் கணக்காளர் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட முகாமைத்துவ உதவியாளர் என்பவர்களின் உடனடி செயற்பாட்டின் விளைவாகக் குறித்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டதுடன் விசாரணைகள் இடம்பெற்று நீதியைப் பெறவும் வழிசமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் தமது வலயத்தின் செயற்பாடுகள் தொடர்பில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் தொடர்ச்சியான அவதானத்தினை செலுத்தியிருக்கும் பட்சத்தில் இவ்வாறான ஒரு பாரிய நிதி மோசடி இடம்பெற வாய்ப்பிருந்திருக்காது என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது.

  • Recent
Scroll to top