யாழில் ஒன்பது வயது சிறுமிக்கு கொரோனா தொற்று! வெளியாகியுள்ள தகவல்

யாழ்ப்பாணம்- உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 9 அகவை சிறுமி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார்.

உடுவில் – சங்குவேலியில் தமது வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்ட ஒருவருக்கே வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இடம்பெற்ற பி.சி.ஆர் பரிசோதனை முடிவில் இது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கொழும்பு – கொட்டாஞ்சேனையில் உள்ள விருந்தகம் ஒன்றில் பணியாற்றும் தந்தையிடம் சென்று திரும்பிய தாய் மற்றும் மகள்கள் இருவர் வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர். அவர்கள் மூவரிடமும் நேற்று மாதிரிகள் பெறப்பட்டன.

இந்தநிலையில் அவர்களில் 9 அகவை சிறுமிக்கே கொரோனா உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

தாய்க்கும் மற்றொரு பிள்ளைக்கும் முதல் பரிசோதனையில் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அவர்கள் தொடர்ந்து சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த வாரம் உடுவில் அம்பலவாணர் வீதி – உதயசூரியன் சந்தியில் தாய் மற்றும் 2 அகவைக்கொண்ட மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  • Recent
Scroll to top