தனிமைப்படுத்தலின் போது டிமிக்கி காட்டுவோரை பிடிக்க களமிறங்குகிறது பொலீஸ் புலனாய்வு

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் தமது வீடுகளில் இருந்து வெளியேறுகின்றார்களா? என்பது தொடர்பில் அறிந்துக் கொள்ள புலனாய்வு பிரிவினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சிலர் அதனை மீறி வெளியில் நடமாடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

கொவிட்-19 நோயாளர்களுடன் தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையிலேயே தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதேவேளை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள மேல் மாகாணத்திலும் எஹெலியகொட மற்றும் குலியாப்பிட்டிய காவல்துறை அதிகார பிரதேசங்களிலும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்கள், மருந்து பொருட்கள் என்பவற்றை நடமாடும் வர்த்தக நிலையங்கள் ஊடாக விநியோகிக்கும் செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Recent
Scroll to top