மூட நம்பிக்கைகளால் கொரோனாவை ஒழிக்க முடியாது – பௌத்த பிக்குமார்

நாடு தொற்று நோய் பரவலை எதிர்நோக்கி இருக்கும் சந்தர்ப்பத்தில் மூட நம்பிக்கைகளின் பின்னால் செல்லாது மருத்துவ ஆலோசனைகளை பின்பற்றி விழிப்புடன் நடந்துக்கொள்ளுமாறு பௌத்த பிக்குமார், இலங்கை மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாய மந்திரங்கள், தெய்வசக்திகள் உட்பட வேறு வழிபாடுகள் மூலம் கொரோனா வைரஸை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கை பௌத்த தர்மம் ஏற்றுக்கொள்ளாது என தென்னிலங்கையின் பிரதான சங்க நாயக்கர் கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

பௌத்த தர்மம் அப்படியானவற்றை செய்யுமாறு மக்களை தூண்டாது. இவை மூட நம்பிக்கை எனவும் அவர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான சுகாதார வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளுக்கு அப்பால் சென்று மூட நம்பிக்கைகள் மீது நம்பிக்கை வைப்பது தொடர்பாக சமூகத்தில் கடுமையான வாத விவாதங்கள் ஏற்பட்டுள்ள பின்னணியில் சோபித தேரர் இதனை கூறியுள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஸ்ரீ வல்பொல ராகுல நிதியத்தின் கல்கந்தே தம்மானந்த தேரர், பின்பற்றுதல்களுக்கு பின்னால் செல்வதை நிறுத்தி விட்டு, இந்த சந்தர்ப்பத்தில் விழிப்புடன் செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

வணங்குதல், பூஜைகளை செய்தல், ஊர்வலங்களை நடத்துதல் பௌத்த தர்மத்தில் உள்ளவை அல்ல. இவை காலத்துடன் ஏற்பட்ட கலாசார விடயங்கள்.

பௌத்த தர்மத்திற்கு அமைய இந்த சந்தர்ப்பத்தில் விழிப்புடன் செயற்பட வேண்டும். பௌத்த தர்மத்தின் பெறுமதியான படிப்பினைகளை செயற்பாட்டு ரீதியாக செயற்படுத்த மக்களை ஊக்குவிக்க வேண்டியதே தற்போது செய்ய வேண்டும் எனவும் தம்மானந்த தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

  • Recent
Scroll to top