ஆசிரியர்களுக்கு சீருடையாக உள்ளூரில் தயாரிக்கப்பட்ட சேலைகள் வழங்க நடவடிக்கை

அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான சீருடையாக உள்ளூரில் தயாரிக்கப்பட்ட சேலைகளை வழங்குவது தொடர்பில் கௌரவ பிரதமரும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முன்வைத்த முன்மொழிவிற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

2020ஆம் ஆண்டிற்கான பௌத்த அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான சீருடையாக, உள்ளூர் உற்பத்தியாளர்களினால் தயாரிக்கப்பட்ட 76 ஆயிரம் சேலைகளை விநியோகிப்பதற்கு துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் கௌரவ பிரதமரினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு (2020.11.02) கூடிய அமைச்சரவையில் அனுமதி கிடைத்துள்ளது.

இதற்கான செலவானது 182.4 மில்லியன் ரூபாயாகும்.இதுவரை இலங்கை முழுவதும் செயற்பட்டுவரும் 11 ஆயிரத்திற்கும் அதிகமான பௌத்த அறநெறி பாடசாலைகளில் சுமார் 76 ஆயிரம் ஆசிரியர்கள் சேவையாற்றுகின்றனர்.

நாடளாவிய ரீதியில் செயற்படும் பௌத்த அறநெறி பாடசாலைகளில் சேவையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு சீருடை வழங்கும் நடவடிக்கை 2004ஆம் ஆண்டு முதல் இதுவரை செயற்பாட்டிலுள்ளது.

அந்த வேலைத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் புதிய அரசாங்கத்தின் நோக்கின் கீழ் இவ்வாறு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சேலைகளை அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ஊடக பிரிவு

  • Recent
Scroll to top