நாமலின் செயலாளர் தொடர்பில் துணிவுடன் கேள்வி கேட்ட அரச அதிகாரி யார்?

கொழும்பில் இருந்து வருகை தந்த நாமல் ராஜபக்சவின் செயலாளர் உள்ளிட்ட நால்வர் வவுனியாவில் நடமாடித் திரிகின்றனர்.

அரசியல் பின்புலம் கொண்டவர்களை நாம் என்ன செய்வது என வவுனியாவில் இன்று இடம்பெற்ற கொரோனா தொடர்பான கலந்துரையாடலில் அதிகாரி ஒருவரினால் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட கொரோனா நிலைமை தொடர்பில் மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கொழும்பு உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தருவோரை தனிமைப்படுத்த வேண்டும் எனவும், பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த அதிகாரி ஒருவர்,

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்கு இன்று காலை கிடைத்த தகவலின் அடிப்படையில் இளைஞர் சேவைகள் மன்றத்தில் அபாய வலயமான கொழும்பில் இருந்து வந்த சிலர் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதன் பிரகாரம் நாம் அங்கு சென்று பார்த்த போது நாமல் ராஜபக்சவின் செயலாளர் உள்ளிட்ட நால்வர் தங்கியுள்ளனர். அவர்களிடம் கேட்டபோது அவர்கள் வவுனியாவில் சிலரை சந்திக்க வந்துள்ளதாக தெரிவித்தனர்.

அதில் மாவட்ட அரச அதிபர் சமன் பந்துல சேன, பிரதேச செயலாளர் ந.கமலதாசன் உள்ளிட்ட அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக தெரிவித்ததுடன், தாம் ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையும் வவுனியாவில் சந்தித்ததாக தெரிவித்தனர்.

இந்நிலையில், அவர்கள் அரசியல் பின்புலம் உள்ளவர்கள் என்பதால் நாம் அதிகளவில் அழுத்தமாக எதனையும் கூற முடியாமல் உள்ளதாகவும், இது தொடர்பில் எவ்வாறான நடைமுறைகளை பின்பற்றுவது எனவும் குறித்த அதிகாரி கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

  • Recent
Scroll to top