யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பரீட்சை பெறுபேறுகளில் விமோசனம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான பரீட்சைப் பெறுபேறுகள் உரிய காலப்பகுதிக்குள் வெளிவருவதை உறுதிப்படுத்தும் வகையிலான புதிய நடைமுறையொன்றை துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா அறிமுகப்படுத்தியுள்ளார்.

பரீட்சைப் பெறுபேறுகள் உரிய காலப்பகுதிக்குள் வெளிவராததனால் பட்டமளிப்பு விழா காலதாமதமடைதல் மற்றும் மாணவர்கள் தொழில் வாய்ப்புக்களை பெறமுடியாமல் சிரமங்களை எதிர்நோக்குதல் பற்றிக் கடந்த 1ஆம் திகதி இடம்பெற்ற பேரவைக்கூட்டத்தில் கணக்காய்வாளர், திணைக்கள அறிக்கை மூலம் துணைவேந்தரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்தப் புதிய இறுக்கமான நடைமுறையை பேரவைக் கூட்டத்தில் வைத்து பீடாதிபதிகளுக்கு அறிவித்துள்ளார்.

இதன்படி ஒவ்வொரு பாடங்களுக்கான பரீட்சை வினாத்தாள்கள் தயாரிக்கப்படும் நேரத்திலேயே வினாத்தாள்களை மதிப்பீடு செய்தல், இரண்டாம் மதிப்பீடு, துறைத்தலைவரின் அனுமதி, பீடாதிபதியின் அனுமதி, பரீட்சைக் கிளையிடம் பெறுபேறுகள் ஒப்படைக்கப்படுதல்ஆகியவற்றுக்கான திகதிகளையும் முற்கொண்டே நிர்ணயிக்குமாறு துணைவேந்தர் அறிவுறுத்தியுள்ளார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலின்படி இரண்டு மாத காலப்பகுதிக்குள் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாவதை உறுதிப்படுத்தும் வகையில் இவை அனைத்தும் இரண்டு மாத காலப்பகுதிக்குள் நடைபெறுவதை பீடாதிபதிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் பணித்துள்ளார்.

உரிய காலப்பகுதிக்குள் மதிப்பீடு செய்து முடிக்கப்படாத விடைத்தாள்களை அந்தந்த விரிவுரையாளரிடமிருந்து மீளப்பெற்று பல்கலைக்கழகத்துக்கு உள்ளேயோ அல்லது வேறு பல்கலைக்கழகங்களின் துறைசார்ந்த பொருத்தமான விரிவுரையாளர்கள் மூலமாகவோ மதிப்பிட்டு உரிய காலத்துக்குள் நிறைவு செய்ய ஏற்பாடு செய்யுமாறும் துணைவேந்தர் பணித்துள்ளார்.

உரிய காலப்பகுதிக்குள் விடைத்தாள் திருத்தும் பணிகளை நிறைவு செய்யாத விரிவுரையாளர்களுக்கு மதிப்பீட்டுக்கான கொடுப்பனவுகளை இரத்துச் செய்வதுடன், தண்டப்பணம் அறவிடும் பொறிமுறை ஒன்றும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா பீடாதிபதிகளுக்குக் அறிவுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் காலம் காலமாக பரீட்சைப் பெறுபேறுகள் உரிய காலப்பகுதிக்குள் வெளிவராமை குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக பல தரப்புக்களாலும் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், இந்தப் புதிய நடைமுறை மூலம் எதிர்காலத்தில் குறைபாடு நிவர்த்தி செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

  • Recent
Scroll to top