இலங்கை எரிபொருள் தட்டுப்பாடு – பொய்த்துப் போன அமைச்சரின் காரணம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு, அந்த நாட்டில் செயல்பட்டு வரும் இந்தியன் ஒயில் நிறுவனமே காரணம் என்ற குற்றச்சாட்டை அந்த நிறுவனம் மறுத்துள்ளது.

இலங்கையில் அண்மைக் காலமாக நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு இந்தியன் ஒயில் நிறுவனத்தின் துணை நிறுவனமான லங்கா இந்தியன் ஆயில் (எல்ஐஓசி) நிறுவனத்தின் விற்பனை மையங்களில் எரிபொருள் விற்பனை நிறுத்தப்பட்டதே காரணம் என்று இலங்கை பெற்றோலியம் மற்றும் எரிவாயுத் துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், எல்ஐஓசி நிறுவனம் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கையில் நம்பகத்தன்மை மிக்க எரிபொருள் விநியோகஸ்தரான எங்களது நிறுவனம் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.

எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டால், அதற்கேற்ப அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எங்கள் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

எனினும், அண்மைக் கால எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு எங்களது நிறுவனமே காரணம் என்ற உண்மைக்குப் புறம்பான தகவல், உள்நோக்கத்துடன் பரப்பப்பட்டு வருகிறது.

இலங்கையின் 16 சதவீத எரிபொருள் தேவையை மட்டுமே எல்ஐஓசி பூர்த்தி செய்து வருகிறது. எஞ்சிய 84 சதவீத எரிபொருள் தேவையை இலங்கை அரசுக்குச் சொந்தமான சிலோன் பெட்ரோலியம் நிறுவனமே நிறைவு செய்கிறது.

எனவே, எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு அந்த நிறுவனமே காரணமாக இருக்க முடியும்.

எங்களது நிறுவனத்திடம் தேவைக்கு அதிகமாகவே எரிபொருள் இருப்பு உள்ளது. எங்களது எரிபொருள் விற்பனை மையங்களில் சராசரியாக தினமும் விற்பனை செய்யப்படும் 775 மெட்ரிக் தொன் எரிபொருள் தற்போதும் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

எனவே, எங்கள் நிறுவனம் எரிபொருள் விற்பனையை நிறுத்தியதாகக் கூறப்படுவது முற்றிலும் பொய்யான தகவலாகும்.

‘பார்ச்சூன் 500’ பட்டியலில் இடம்பெற்ற, உலகத் தரம் வாய்ந்த இந்தியன் ஆயில் நிறுவனத்தின் துணை நிறுவனமான எங்களது எல்ஐஓசி, எப்போதும் தகுந்த முறையில் திட்டமிட்டு, தேவையான அளவு எரிபொருளை முன்கூட்டியே இருப்பு வைத்துக் கொள்ளும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம்: தினமணி

Comments

comments

Related posts