வடகொரியாவுக்கு எதிராக இலங்கையின் அதிரடி நடவடிக்கை

வடகொரியாவுடன் வர்த்தகத்தை மேற்கொள்வதற்கு இலங்கையை சேர்ந்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்குத் தடை விதித்து, சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இந்த சிறப்பு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இதற்கமைய, வடகொரியாவில் உள்ள எந்தவொரு நபருடனும், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள இலங்கையர் எவரும், சொத்துக்களை வழங்குவது, வாங்குவது, நிதிச் சேவைகள், தொழில்நுட்ப பயிற்சி ஆகியவற்றுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஆலோசனை, அணு திட்டத்துடன் தொடர்புடைய பொருட்கள் சேவைகள் மற்றும் உற்பத்தி, கையகப்படுத்தல் பராமரிப்பு, சேகரிப்பு, சேமிப்பு, போக்குவரத்து, பரிமாற்றுதல் அல்லது பயன்படுத்தல் ஆகிய விடயங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வட கொரியா அதன் அணுசக்தி மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டங்களுடன் தொடர்புடைய அனைத்து நடவடிக்கைகளையும் இடைநிறுத்த வேண்டும்.

அனைத்துலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அனைத்து அணுசக்தி ஆயுதங்களையும், ஏற்கனவே இருக்கும் அணுசக்தி திட்டங்களையும் கைவிடும் வரையில் இந்த தடை பொருந்தும்.

இதனிடையே, வடகொரியாவின் கப்பல்களுக்கான தரிப்புச் சேவைகள், விநியோகம், சேவை, குத்தகைக்கு விடுதல், கப்பல்களை வாடகைக்கு அமர்த்தல், மாலுமிகளுக்கான சேவைகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

வடகொரிய நிதி நிறுவனங்கள் இலங்கையில் புதிய கிளைகள், துணை நிறுவனங்கள், பிரதிநிதிப் பணியகங்களை அமைக்கவும் அனுமதிக்கப்படாது.

இந்த ஒழுங்குமுறைகளை நடைமுறைப்படுத்த நியமிக்கப்படும் தகுதிவாய்ந்த ஆணையம், வட கொரிய இராஜதந்திரிகளை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கு அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்ய அதிகாரத்தையும் பெற்றிருக்கும் என சிறப்பு வர்த்தமானி அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Comments

comments

Related posts