நேற்றிரவு சாவச்சேரியில் மீண்டும் கொடூரமான வாள்வெட்டு

யாழ். சாவகச்சேரி, கிராம்புவில் பகுதியிலுள்ள வீடொன்றிட்குள் புகுந்த அடையாளம் தெரியாத குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதுடன், சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மோட்டார் சைக்கிள்களில் வந்த 12 பேர் கொண்ட அடையாளம் தெரியாத குழுவொன்று கிராம்புவில் பகுதியிலுள்ள வீடொன்றிட்குள் நுழைய முற்பட்டுள்ளது.

குறித்த நபர்கள் வாள்களுடன் வருவதைக் கண்டதும் வீட்டில் இருந்தவர்கள் “திருடர்கள்… திருடர்கள்….” என உரத்துச் சத்தமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் வீட்டிற்கு வெளியே வந்த இளைஞரை குறித்த குழு சரமாரியாக வாள்களால் தாக்கியுள்ளது. இதனைத் தடுக்க வந்த இளைஞரின் சகோதரி மீதும், சத்தம் கேட்டு ஓடி வந்த அயல் வீட்டு இளைஞர் மீதும் வாள்வெட்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

சம்பவத்தில் பரமேஸ்வரன் சுஜீவன் (வயது 30), அவரது சகோதரியான பரமேஸ்வரன் சுஜித்தா(வயது 27) மற்றும் ஜெயரத்தினம் சிறிராஜ் (வயது-30) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், இவர்களில் சுஜீவன் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் வாள்வெட்டுச் சம்பவத்திற்கான சரியான காரணம் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.

Comments

comments

Related posts