புளூவேல் விளையாட்டிற்கு பின் இருக்கும் மர்மம் – இளம் பெண் பிரியாவின் தகவல்களை திருடிண அட்மின்

புதுச்சேரியில் புளுவேல் விளையாட்டில் சிக்கி மீட்கப்பட்ட இளம் பெண் வங்கி ஊழியர் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

லேப்டாப்பில் உள்ள தகவல்களை திருடி மிரட்டியதால் உடலில் 10 இடங்களில் குண்டூசியால் எப் -45 என்று கிழித்து கொள்ளும் சைகோ நிலைக்கு தள்ளப்பட்ட பரிதாப சம்பவத்தின் பின்னணி குறித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

புளூவேல் என்ற பிளாக்மெயில் விளையாட்டில் சிக்கி இருந்த புதுச்சேரி உப்பளத்தை சேர்ந்த பிரியா என்ற வங்கி ஊழியர் ஞாயிற்றுகிழமை அதிகாலையில் கடலில் இறங்கி செல்பி எடுத்த போது மீட்கப்பட்டார்..!

அப்போது ரோந்துபணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் பெண்காவலர்களின் உதவியுடன் மீட்டனர். உறவினர்கள் வந்து அவரை அழைத்துச்செல்ல முயன்றபோது சைகோ மனநிலையில் காணப்பட்ட பிரியா அங்கிருந்து செல்லமறுத்து அடம்பிடித்தார்

அவரை மீட்ட காவல்துறையினரை பாராட்டிய, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தா, ரொக்கப்பரிசும் சான்றிதழும் வழங்கினார். சூப்பிரண்டு வெங்கடசாமி தலைமையிலான காவல்துறையினர் மனோதத்துவ நிபுணருடன், பிரியாவின் வீட்டுக்கு சென்று நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

புளூவேல் சவால் குறித்து நண்பர்கள் பகிர்ந்த தகவலை உறுதிபடுத்திக்கொள்ள தனது லேப்டாப்பில் புளூவேல்கேமை டவுன்லோடு செய்துள்ளார் பிரியா..!

பதிவிறக்கம் செய்தவுடன் அவரால் அந்த விளையாட்டில் நுழைய முடியவில்லை, ஆனால் அவரது மின்னஞ்சல் முகவரிக்கு அடுத்தடுத்துவந்த கட்டளைகள் அவரது பெயர், வயது, பணிபுரியும் இடம் போன்றவற்றை உறுதி செய்யும் வகையில் இருந்துள்ளது. மேலும் அவர் பெண் என்று குறிப்பிட்டதால் அவரை ஸ்கைப் மூலம் பேசும்படி ரஸ்யாவில் இருந்து மர்ம நபர் ஒருவர் கட்டளையிட்டுள்ளார்.

இது தேவையில்லாத வேலை என்று பிரியா விளையாட விரும்பாமல் வெளியே வந்துள்ளார். இதையடுத்து பிரியாவின் செல்போனில் அவரது லேப்டாப் தகவல்கள் திருடப்பட்டு விட்டதாகவும் , அப்படி திருடப்பட்ட தகவலில் ஒன்றை பிரியாவின் பார்வைக்கே அனுப்பி உள்ளான் பிளாக்மெயில் விளையாட்டான புளூவேல் அட்மின் ..!

மிரண்டுபோன பிரியா , கடந்த 21 ந்தேதி முதல் அந்த பிளாக்மெயிலர் தெரிவித்த கட்டளைகளை நிறைவேற்ற புளூவேல் கேம் விளையாட தொடங்கி உள்ளார். வீட்டின் தனியறையில் கதவு ஜன்னல்களை மூடிவிட்டு தன்னந்தனியாக கட்டளையை ஏற்று விளையாடி உள்ளார். ஆரம்பத்தில் எளிதான டாஸ்க்குகளை விளையாடிய பிரியா, எப் – 45 என்று உடல் முழுவதும் 10 இடங்களில் குண்டூசியால் கிழித்து எழுதும்படி வந்த கட்டளையை நிறைவேற்ற அப்படியே செய்துள்ளார். இதனால் பிரியாவுக்கு கடுமையான உடல் வலி ஏற்பட்டுள்ளது.

ரஸ்யாவில் இருந்து ஸ்கைப்மூலம் பேசியவரின் மிரட்டலுக்கு பயந்து அவன் சொன்னதையெல்லாம் செய்து தனது செல்போனில் வீடியோவாக எடுத்து அவர்களுக்கு அப்லோடு செய்துள்ளார். அதே போல கையில் புளூவேல் என்று எழுதிக்கொண்ட பிரியா அதனை மறைப்பதற்காக முழுக்கை டீசர்ட் அணிவதையும் வழக்கமாக்கி உள்ளார். மேலும் நீலத்திமிங்கலத்தின் படத்தை பேனாவால் வரைந்து அதனை குண்டூசியால் கிழித்துக்கொண்ட பிரியா, அதில் இருந்து வெளியில் வரமுடியாத இறுக்கமான மன நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதற்கிடையே பிரியாவின் இந்த வினோத நடவடிக்கைகளை கண்டு சந்தேகமடைந்து அவரது தோழி விசாரித்த போது, பிரியா, புளூவேல் அரக்கனிடம் சிக்கி இருப்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.இந்த நிலையில் தான் அதிகாலை 4 மணிக்கு ஆழம் மற்றும் ஆபத்தான புதுச்சேரி கடலில் இறங்கி செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட கட்டளையிட்டுள்ளான் புளூவேல் அட்மின்.

அதனை நிறைவேற்ற பிரியா கடற்கரைக்கு சென்றுள்ள தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டதால் அவர்கள் விரைந்து சென்று பிரியாவை பத்திரமாக மீட்டனர். மொத்தம் உள்ள 50 கட்டளைகளில், பிரியா 4 கட்டளைகளை மட்டுமே விளையாடிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த காவல்துறையினர். அவரிடம் ரஷ்யாவில் இருந்து ஸ்கைப் மூலம் பேசி மிரட்டிய நபர் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காக மத்திய உள்துறைக்கு புதுவை போலீசார் உரிய முறையில் தகவல்களை அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

இதற்கிடையே ஜிப்மர் மனோதத்துவ டாக்டர் குமரன் மூலம் பிரியாவுக்கு தொடர்ந்து மனோதத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. பிரியாவின் தோழிகள் சிலரும் புளூவேல் விளையாட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

புளூவேல் விளையாட்டில் சிக்கி பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள், இளைஞர்கள் உதவிக்கு 104 என்ற எண்ணை அழைத்து தகுந்த தீர்வுகாணலாம். அல்லது 100 என்ற எண்ணில் உதவி கோரலாம் என்று காவல்துறை அறிவித்துள்ளது.

Comments

comments

Related posts