விருச்சிகம் – ஆவணி மாத ராசி பலன்கள் (17-8-2017 முதல் 16-9-2017 வரை)

சொல்லும் சொற்களையெல்லாம் வெல்லும் சொற்களாக மாற்றும் விருச்சிக ராசி அன்பர்களே!

ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் புதனோடும், ராகுவோடும் இணைந்திருக்கிறார். எனவே பொருளாதார நிலை உயரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அதிகாரத்துவ யோகம் பெற்றவர்களின் அனுகூலம் வந்து சேரும். மதிப்பும், மரியாதையும் உயரும். நண்பர்களின் ஒத்துழைப்போடு பல நல்ல காரியங்களைச் செய்து முடிப்பீர்கள்.

தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் பலம் பெற்று விளங்குவதால், தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த லாபம் இதயம் மகிழும் விதத்தில் கிடைக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பும், வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும் மாதம் இது. உங்கள் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற விதம் தங்கள் குணங்களை மாற்றிக் கொண்டு செயல்படுவர்.

அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும். நீண்ட நாட்களாக முடிவடையாத சில காரியங்கள், இப்பொழுது திடீரென முடிவாகி மகிழ்ச்சியை வரவழைத்துக் கொடுக்கும். வங்கிகளில் உதவிகளை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு அதுகைகூடும். வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைக்க சூரியபலம் கைகொடுக்கும் என்பதால், ஞாயிறு தோறும் சூரிய வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.

சமீபத்தில் பெயர்ச்சியான ராகு 9-ம் இடத்தில் வருவதன் மூலம் ஒளிமயமான எதிர்காலம் அமையப்போகிறது. அதற்கு முன்ஏற்பாடாக ராகு- கேதுக்களுக்குரிய பிரீதியையும், நாகசாந்திப் பரிகாரங்களையும் இம்மாதம் அனுகூல நாளில் செய்து கொள்வது நல்லது. அதே நேரத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று விரதமிருந்து ஆனை முகப்பெருமானை வழிபட்டால், ஆனந்தத்தை வரவழைத்துக் கொள்ள இயலும்.

கடக சுக்ரனும், சிம்ம சுக்ரனும்!

ஆகஸ்டு 22-ந் தேதி கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். 7,12-க்கு அதிபதியான சுக்ரன் 9-ல் சஞ்சரிக்கும் பொழுது, பயணங்களால் பலன் கிடைக்கும். புதிய வாகனம் வாங்க விரும்புவீர்கள். பூர்வீக சொத்துகளில் பெண்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். செப்டம்பர் 15-ந் தேதி சிம்மத்திற்கு சுக்ரன் செல்லும்பொழுது, மிகுந்த யோகத்தைக் கொடுக்கும். அரசுவழி அனு கூலங்களும் ஆதாயம் தரும். காரியங்களும் ஏராளமாக நடைபெறும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும் நேரமிது.

சிம்ம செவ்வாயின் சஞ்சாரம்!

ஆகஸ்டு 28-ந் தேதி சிம்மத்திற்கு செவ்வாய் செல் கிறார். இது ஒரு அற்புதமான நேரம். ராசிநாதன் செவ்வாய் 10-ம் இடத்தில் பலம்பெற்ற சூரியனோடு இணையும் பொழுது தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். பட்டம், பதவிகளால் பெருமையும், பாராட்டு மழையில் நனையும் வாய்ப்பும் உரு வாகும். திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெறும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அதிகாரப் பொறுப்புகள் கிடைக்கும்.

சிம்ம புதனின் சஞ்சாரம்!

செப்டம்பர் 2-ல் சிம்மத்திற்கு வரும் புதனால், தொழில் வளர்ச்சி மேலோங்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். உடன்பிறப்புகளின் இல்லங்களில் நடைபெறும் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளிநாட்டு முயற்சிகள் வெற்றி தரும்.

குருப்பெயர்ச்சி காலம்!

உங்கள் ராசிக்கு செப்டம்பர் 2-ந் தேதி குருப்பெயர்ச்சியாகி துலாம் ராசிக்கு செல்கிறார். அதன் பார்வை 4,6,8 ஆகிய இடங் களில் பதிகிறது. எனவே சுகங்களும், சந்தோஷங்களும் வந்து சேரும். பயணங்களால் உங்களுக்கு பலன் கிடைக்கும். வீடு வாங்கும் யோகம் அல்லது கட்டும் யோகம் உண்டாகும். கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். இடமாற்றம், ஊர்மாற்றம், இலாகா மாற்றங்கள் எண்ணியபடி வந்து சேரும். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.

பெண்களுக்கான பலன்கள்!

இம்மாதம் நன்மைகள் அதிகம் நடைபெறும் மாதமாகும். சுபவிரயங்கள் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் பாசமும், நேசமும் கூடும். பிள்ளைகளால் பெருமை சேரும். குழந்தைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிட்டும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. உத்தியோக மாற்றங்களால் நன்மை கிடைக்கும். வாகனம் வாங்கும் யோகம் உண்டு. விநாயகர் வழிபாடு வெற்றியை வழங்கும்.

Comments

comments

Related posts