மீனம் – ஆவணி மாத ராசி பலன்கள் (17-8-2017 முதல் 16-9-2017 வரை)

நிகழ்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் மீன ராசி அன்பர்களே!

ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத்தின் தொடக்கத்தில் 5-ல் ராகுவும், 11-ல் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். குருவின் நேர் பார்வை செப்டம்பர் 1-ந் தேதி வரை உங்கள் ராசியில் பதிவாகிறது. அதன்பிறகு அஷ்டமத்தில் குரு அடியெடுத்து வைக்கிறார்.

8-ல் குரு வரும்பொழுது இடர்பாடுகள் அதிகரிக்கும். ஆரோக்கிய தொல்லை வரலாம். எதிர்பார்த்த காரியங்கள் நடைபெறுவதில் தாமதம் உண்டாகும். உறவினர் பகை ஏற்படும். ஊர்மாற்றங்களும், இடமாற்றங்களும் திருப்தி தருமா? என்பது சந்தேகம் தான். மாதத்தின் பிற்பகுதியில் எதையும் யோசித்துச் செய்வதன் மூலமே யோகங்கள் ஏற்படும்.

பஞ்சம ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால், பிள்ளைகள் மூலம் விரயங்கள் ஏற்படலாம். 5-ம் இடத்தில் செவ்வாய், புதன் சேர்க்கை பெற்றிருக்கிறார்கள். உங்கள் ராசிக்கு 2,9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது, நிலம் தொடர்பான பிரச்சினைகள் அகலும். பாகப்பிரிவினைக்கு இதுவரை ஒத்துவராத உடன்பிறப்புகள் இனி ஒத்துவருவர். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.

குருப்பெயர்ச்சிக்கு முன்பு ஒரு சிலருக்கு திடீரென திருமணப் பேச்சுகள் முடிவாகலாம். அதிகாரப் பதவியில் உள்ளவர் களின் அனுகூலத்தோடு தொழில் வளர்ச்சியை ஏற்படுத்திக் கொள்வீர்கள். தனாதிபதி மாதத் தொடக்கத்தில் நீச்சம்பெற்றுள்ளதால் சுபச்செலவுகள் அதிகரிக்கும்.

ஒன்பதாமிடத்தில் சனி பகவான் உலா வருகிறார். எனவே தந்தை வழி உறவில் இருந்த விரிசல் அகலும். சகோதரர்களின் நலனில் அக்கறை காட்டும் பெற்றோர் நமக்கு எதுவும் செய்யவில்லையே என்று கவலைப்பட்டவர்கள், இப்போது பெற்றோர்களின் பாசமழையில் நனைவீர்கள். இம்மாதம் விநாயகர் சதுர்த்தி வருவதால் தும்பிக்கையான் வழிபாட்டை மேற்கொள்வதோடு நம்பிக்கையோடு தட்சிணாமூர்த்தி மற்றும் ராகு கேதுக்களின் சிறப்பு வழிபாடுகளையும் மேற்கொள்ளுங்கள்.

கடகச் சுக்ரனும், சிம்மச் சுக்ரனும்

ஆகஸ்டு 22-ந் தேதி கடக ராசியிலும், செப்டம்பர் 15-ந் தேதி சிம்ம ராசியிலும் சுக்ரன் சஞ்சரிக்கப் போகிறார். கடகத்தில் சுக்ரன் சஞ்சரிக்கும் பொழுது, குடும்பப் பிரச்சினைகள் அதிகரிக்கும். தொழிலில் ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழ்நிலையும் ஏற்படலாம். சிம்மத்தில் சுக்ரன் சஞ்சரிக்கும் பொழுது, விபரீத ராஜயோக அடிப்படையில் எண்ணற்ற நற் பலன்கள் கிடைக்கும். திறமை மிக்கவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருந்து, நீங்கள் தீட்டும் திட்டங்களை வெற்றி பெறச் செய்வர்.

சிம்மச் செவ்வாய் சஞ்சாரம்!

ஆகஸ்டு 28-ந் தேதி சிம்மத்திற்கு செவ்வாய் வருகிறார். அவர் சூரியனோடு இணைந்து செயல்படுவதால் அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர் களுக்கு அதிகாரப் பதவிகள் கிடைக்கலாம். வீண் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி கைகூடும். வங்கிகளில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும் நேரமிது.

சிம்ம புதன் சஞ்சாரம்!

கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகமான புதன், செப்டம்பர் 2-ந் தேதி சிம்மத்தில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த காலத்தில் உத்தியோக மாற்றங்கள் உறுதியாகலாம். எதிர்பாராத பணிமாற்றம், நன்மை தரும் விதத்திலேயே அமையும். பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கு ஏற்ற விதத்தில் ஆதாயம் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பும் கைகூடலாம்.

குருப்பெயர்ச்சிக் காலம்!

செப்டம்பர் 2-ந் தேதி துலாம் ராசிக்கு குருபகவான் செல்கிறார். அஷ்டமத்து குருவாக வருவதால், முன் யோசனையுடன் செயல்பட்டால் முன்னேற்றத் தடைகள் எதுவும் வராது. பதவி மாற்றங் களும், பணிமாற்றங்களும் இயற்கையாகவே அமையும். இருப்பினும் அதன்பார்வை 2,4,12 ஆகிய இடங்களில் பதிவதால், குடும்பத்தில் உள்ளவர்களின் அனுசரிப்பு கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல்கள் ஒழுங்காகும். கூட்டுத் தொழில் தனித் தொழிலாக மாறலாம். நீண்ட தூரப் பயணங்கள் உருவாகும். நட்பால் நல்ல காரியம் நடைபெறும்.

பெண்களுக்கான பலன்கள்!

இம்மாதம் முதல் பாதியில் முன்னேற்றம் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும். பிற்பாதியில் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு குடும்பச்சுமை கூடும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. தாய்வழி ஆதரவு கிடைக்கும். உடன்பிறப்புகள் பாசத்தோடு பழகி, பணத்தேவையைப் பூர்த்தி செய்வர். பிள்ளைகளால் விரயமுண்டு. உத்தி யோகத்தில் உள்ளவர்கள் திடீர் இடமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். மேலதிகாரிகளின் ஆதரவு குறையலாம். செவ்வாய் சிம்மத்தில் சஞ்சரிக்கும் நேரம், செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். ஆனைமுகன் வழிபாடும், ஆறுமுகன் வழிபாடும் அதிக நற்பலன்களை வழங்கும்.

Comments

comments

Related posts