2017 – 2019 ராகு-கேது பெயர்ச்சி – பிறந்த தேதிக்கான பலன்கள்

1, 10, 19, 28 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கானது

27.7.2017 முதல் 13.2.2019 வரை

ராஜகிரகம் என்று அழைக்கப்படும் சூரியனை அதிபதியாகக் கொண்ட ஒன்றாம் எண் அன்பர்களே, நீங்கள், சூரியன் எப்படி உலகிற்கு பிரம்ம ஆதாரமாக விளங்கி ஒளி தருகிறதோ, அதுபோல பலருக்கும் நன்மை செய்து வாழ்வீர்கள். தைரியமும், வீரமும், அஞ்சா நெஞ்சமும் கொண்டவர்கள். அன்பும், பண்பும், மரியாதையும், தெய்வ பக்தியும் தரும குணமும் அதிகம் இருக்கும். வீரம் நிறைந்திருந்தாலும் அமைதி தோற்றம் கொண்டிருப்பீர்கள். எதிரிகளை பந்தாடும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. தன்னம்பிக்கை அதிகம் இருக்கும். நியாயத்தை மிகவும் தைரியமாக எடுத்துக் கூறுவீர்கள். தீர்மானமான கருத்துகளைக் கொண்டவராகவும் நல்ல உழைப்பாளியாகவும் இருப்பீர்கள். ராஜதந்திரம் அதிகம் உடையவர்கள். உயர்பதவியில் இருப்பவர்களிடம் நெருக்கமாக இருப்பீர்கள்.

இந்த ராகுகேது பெயர்ச்சியால் கடந்த 1½ வருடங்களாக இருந்து வந்த கடினமான சூழ்நிலையிலிருந்து விடுபடுவீர்கள். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படமுடியும். குடும்பத்தாரால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். சிலருக்கு பூர்வீக சொத்துகளால் லாபம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி, பொறாமைகள் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு உண்டாகும் காலம் என்பதால் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. பணவரத்தில் ஏற்ற இறக்கம் நிலவினாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமதம் உண்டாகும்.

பூர்வீக சொத்துகளால் வீண்செலவுகளும், புத்திர வழியில் மகிழ்ச்சிக் குறைவும் ஏற்படலாம். பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றால் வீண்பிரச்னைகளில் சிக்கிக் கொள்வீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளின் தீர்ப்பு இழுபறியாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். அவ்வப்போது சற்று மந்தமான நிலை காணப்பட்டாலும் பொருட்தேக்கம் உண்டாகாது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளால் அனுகூலம் அடைவார்கள். அபிவிருத்தியும் பெருகும். பயணங்களால் நன்மை உண்டாகும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது கவனம் தேவை.
பணியில் கவனமுடன் செயல்படுவதும், உயரதிகாரிகளிடம் பேசும்போது நிதானத்தைக் கையாள்வதும் நல்லது. புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப்பின் நிறைவேறும். பெயர், புகழை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டிய காலமிது என்பதால் அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப்பெற முயற்சி செய்வது நல்லது.

மேற்கொள்ளும் பணிகளில் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். பெண்களுக்கு உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. பொருளாதார நிலை ஓரளவுக்கு தேவைக்கேற்றபடி இருக்கும். கலைஞர்கள், வாய்ப்புகள் நழுவிப் போய்விடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. பணவரவு சுமாராக இருக்கும். ஆகவே ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். ரசிகர்களின் ஆதரவு மகிழ்ச்சி உண்டாக்கும். மாணவமாணவியர் கல்வியில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் நற்பலன் அடையலாம். விளையாட்டு போட்டிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையால் வீண் அலைச்சல், பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும். அரசு வழியில் ஆதரவு கிட்டும். பொதுவாக வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், அஜீரணக் கோளாறு தோன்றும். அன்றாடப் பணிகளில் உங்களின் தனித்திறனால் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு நல்ல பெயரெடுப்பீர்கள்.

பரிகாரம்:

தினமும் அருகிலிருக்கும் கோயிலுக்குச் சென்று சிவதரிசனம் செய்து வரவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்:

‘த்ரியம்பகம்’ என்று ஆரம்பிக்கும் ம்ருத்யுஞ்ஞய மந்திரத்தை பாராயணம் செய்யவும்.

மலர் பரிகாரம்:

“செந்தாமரை மலரை” சிவனுக்கு சாத்தி வர தீமைகள் அகலும்.

சிறப்பான கிழமைகள்:

ஞாயிறு, புதன்.

அனுகூலமான திசைகள்:

கிழக்கு, தென்கிழக்கு.

அதிர்ஷ்ட எண்கள்:

1, 5.

2, 11, 20, 29 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கானது

27.7.2017 முதல் 13.2.2019 வரை

மனதுக்கு அதிபதியான சந்திரனை நாயகனாகக் கொண்ட இரண்டாம் எண் அன்பர்களே, நீங்கள் மனசாட்சிக்கு விரோதமான காரியத்தை எக்காலத்திலும் செய்ய மாட்டீர்கள். அன்பு, அடக்கம், பணிவு, பொறுமை, சகிப்புத்தன்மை ஆகியவற்றின் பிரதிநிதியாக இருப்பீர்கள். மக்களால் வெகுவாகப் போற்றப்படுவீர்கள். அனைவரையும் அன்பு எனும் ஆயுதத்தால் அடக்கி விடுவீர்கள். ஆராய்ச்சி எண்ணம் அதிகம் உடையவர்கள். வீட்டின் மீதும் உறவுகளின் மீதும் அதிக பாசம் உள்ளவர்கள். இறை நம்பிக்கை மிக அதிகம். கண்கள் காந்தசக்தியுடையவை. ஏதேனும் இறை நாமங்களை உச்சரித்துக்கொண்டே இருப்பீர்கள். பிறரை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க மாட்டீர்கள். ஒரு புள்ளி கிடைத்தால் போதும், பெரிய கோலமே போட்டுவிடுவதில் வல்லவர்கள். பிறருக்கு எப்போதும் ஏதேனும் கருத்துகளை போதித்துக் கொண்டே இருப்பீர்கள். மகோன்னதமான, செயற்கரிய காரியங்களைச் செய்து, பேரும் புகழும் பெறுவீர்கள்.

இந்த ராகுகேது பெயர்ச்சியால் குடும்பத்தில் இருந்துவந்த பிரச்னைகள் விலகி கணவன்-மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைத்து, மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பணவரவு சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு வீடு, வாகனம், கார் வாங்கும் யோகம் அமையும். கொடுக்கல்வாங்கல் லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவும் முடியும். லாபங்கள் தடைபடாது. வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தை அடையமுடியும். அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள்.

வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரியும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். வழக்குகள் ஆதாயமான முடிவுக்கு வரும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் பெருகும். புதிய வாய்ப்புகளும் தேடிவரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும். அரசுவழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை அபிவிருத்தியை பெருக்கும். வெளியூர் தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கப்பெறும்.பணியில் உயரதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சி தரும். திறமைகளுக்கேற்ற பாராட்டும் கிடைக்கப்பெறும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் ஊதிய உயர்வும் கிடைக்கும். எடுக்கும் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். நினைத்தது யாவும் நிறைவேறி மகிழ்ச்சி தரும்.

அரசியல்வாதிகளுக்குப் பெயரும், புகழும் உயரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். மக்களின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் வெற்றிகள் குவியும். பணவரவு தாராளமாக இருக்கும். மாண்புமிகு பதவிகள் தேடிவரும்.
பெண்களுக்கு உடல்நலம் சிறப்பாக இருப்பதால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். கணவன்மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். சிலருக்கு புத்திர பாக்கியமும் உண்டாகும். சேமிப்பு பெருகும். கலைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும். புதுப்புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.

கைமாற்றுப் பணமும் தடையின்றி வந்துசேரும். சுகவாழ்விற்கு பஞ்சம் இருக்காது. புதிய கார், பங்களா வாங்கி மகிழ்வீர்கள். மாணவ, மாணவியர் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். கல்விக்காக வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பும் கிடைக்கும். விளையாட்டுப்போட்டிகளில் சிறப்பான பரிசுகளைப் பெறுவீர்கள். பொதுவாக உடல்நலம் அற்புதமாக இருக்கும். கடந்த கால மருத்துவச் செலவுகள் குறையும். மனைவி, பிள்ளைகள் நலமுடன் இருப்பார்கள். மனதில் மகிழ்ச்சி குடிகொள்ளும். நீண்டநாள் மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.

பரிகாரம்:

திங்கட்கிழமைதோறும் அருகிலிருக்கும் அம்மன் கோயிலுக்குச் சென்று இலுப்பை எண்ணையில் பஞ்சமுக தீபம் ஏற்றி வணங்கி 16 முறை வலம் வரவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்:

“ஓம் ஸ்ரீமாத்ரே நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 16 முறை சொல்லவும்.

மலர் பரிகாரம்:

திங்கட்கிழமை தோறும் அம்மனுக்கு அரளிப்பூமாலை சாத்திவழிபடவும்.

சிறப்பான கிழமைகள்:

திங்கள், வியாழன்.

அனுகூலமான திசைகள்:

தெற்கு, தென்மேற்கு.

அதிர்ஷ்ட எண்கள்:

2, 3, 6.

3, 12, 21, 30 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கானது

27.7.2017 முதல் 13.2.2019 வரை

தனகாரகனான குருவை நாயகனாகக் கொண்ட மூன்றாம் எண் அன்பர்களே, நீங்கள் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை மீறாதவர்கள். நாட்டுப்பற்று, தன்னம்பிக்கை, இறைப்பற்று, மூத்தவரை மதித்தல் ஆகிய குணங்களால் உயர்வடைபவர்கள். நீங்கள் அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகள். ஆலோசனை வழங்குவதில் ஆதவன். பல இடங்களில் நீங்கள் சொல்வதே முடிவாகும். சிறு வயதிலிருந்தே பல செயற்கரிய காரியங்களை எளிதாகச் செய்து பெயர் பெறுபவர்கள். மதிநுட்பத்தால் மாட்சிமை பெறும் உங்களுக்கு உடல் உழைப்பு ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று. உங்களின் உடல் மிகவும் மென்மையானது. பல உணவுவகைகள் அலர்ஜியையும் கூடவே இழுத்துக் கொண்டு வந்துவிடும். உணவுக் கட்டுப்பாடு அவசியம். யாருடைய பணமாவது உங்கள் கையில் இருந்து கொண்டே இருக்கும். பொன் ஆபரணங்களை அதிகம் விரும்புவர்கள். மத நம்பிக்கை அதிகம்.

தன் விஷயங்களை பிறரிடம் சொல்ல மாட்டீர்கள். பொதுக் காரியங்களை நிறைய எடுத்துக்கொண்டு செயல்படும் உங்களுக்கு இதிகாசங்கள், புராணங்கள் இனிக்கும். இந்த ராகுகேது பெயர்ச்சியால் குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். கணவன்-மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். சொந்த பூமி, மனை வாங்கும் யோகம் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று மேன்மை ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். உடல் ஆரோக்கிய விஷயங்களில் கவனமுடனிருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்கள் சிறப்பாக அமையும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புகளாலும் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைபட்ட பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் தற்போது கிடைக்கும்.

கணவன்-மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். உற்றார், உறவினர் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். பணவரவு தாராளமாக இருக்கும். சிலருக்கு சொந்தமாக கார், பங்களா வாங்கும் யோகமும், பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளையும் முதலீடு செய்து லாபம் காணமுடியும். பிறருக்கு முன்ஜாமீன் கொடுக்கும் விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. வம்பு, வழக்குகளில் சற்று இழுபறி நிலை ஏற்பட்டாலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும்.செய்யும் தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புகளால் லாபம் கிட்டும். பயணங்களும் அடிக்கடி அமையும்.

போட்டி, பொறாமை குறையும். நவீன கருவிகள் வாங்க அரசு வழியில் கடனுதவி கிடைக்கும். பணியில் நிம்மதியாக செயல்படுவீர்கள். எதிர்பார்த்திருந்த பதவி, ஊதிய உயர்வு தடையின்றி கிடைக்கும். பொருளாதார உயர்வால் வாழ்க்கைத் தரம் உயரும். உயரதிகாரிகளின் பாராட்டு மகிழ்ச்சி தரும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைப்பளு குறையும். புதிய வேலை வாய்ப்பு தகுதிக்கேற்றபடி கிடைக்கும். அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப் பெற சில போராட்டங்களை மேற்கொள்ளவேண்டியிருக்கும் என்றாலும் பெயர், புகழுக்கு பஞ்சம் ஏற்படாது. எடுக்கும் காரியங்களை திறம்பட செயல்படுத்துவீர்கள். மேடையில் நிதானமாகப் பேசுவது நல்லது. கட்சிப் பணிகளுக்காக நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். வருவாய் பெருகும். பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் திறம்பட ஈடுபட முடியும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.

புத்திர வழியில் சிறுசிறு மன சஞ்சலங்கள் தோன்றும். பணவரவு சிறப்பாக இருக்கும். அசையும், அசையா சொத்துகளால் ஓரளவுக்கு அனுகூலம் ஏற்படும். சேமிக்க முடியும். கலைஞர்கள் இதுவரை பட்ட துயரங்களுக்கு ஒரு முடிவுவரும். எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைப்பதால் ரசிகர்களின் ஆதரவும் பெருகும். வரவேண்டிய பணமும் கைக்கு வந்து சேரும். இழந்தவற்றை மீட்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவும். மாணவ, மாணவியருக்கு கல்வியில் சிறுசிறு தடைகளுக்குப் பின் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். விளையாட்டுப் போட்டிகளில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். பொதுவாக உடல்நலத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தாருக்காக மருத்துவச் செலவுகள் ஏற்படும். தேவையற்ற அலைச்சல–்கள் அதிகரிப்பதால் உடல் சோர்வடையும்.

பரிகாரம்:

வியாழக்கிழமை தோறும் நவகிரக குருவை வணங்கி வரவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்:

“ஓம் ஸ்ரீகுருப்யோ நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 21 முறை சொல்லவும்.

மலர் பரிகாரம்:

மஞ்சள் சாமந்தி அல்லது முல்லை மலரை சிவனுக்கு அர்ப்பணித்து வணங்கவும்.

சிறப்பான கிழமைகள்:

ஞாயிறு, வியாழன்.

அனுகூலமான திசைகள்:

வடக்கு, வடகிழக்கு.

அதிர்ஷ்ட எண்கள்:

3, 9.

4, 13, 22, 31 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கானது

27.7.2017 முதல் 13.2.2019 வரை

எதிா்மறை இயக்கத்தின் காரண கிரகமான ராகுவை நாயகனாகக் கொண்ட நான்காம் எண் அன்பர்களே, மனதில் தோன்றியதை அப்படியே, தைரியமாக வெளியே சொல்லிவிடுவீர்கள். அறிவியலில் விருப்பம் அதிகம். அண்டவெளி, ஜோதிட சாஸ்திரம், மத சம்பிரதாயங்கள் குறித்து தங்கள் கருத்துகளை பிறரிடம் சொல்வதில் ஆர்வமுள்ளவர்கள். சுற்றித் திரிவதில் சுகம் காண்பவர்கள். தன்னம்பிக்கை மிகுதியாக இருந்தாலும், சில நேரங்களில் ஏற்படும் சிரமங்களால் மனமுடைந்துபோவர். மிடுக்கான நடை, உடை, பாவனை ஆகியவை மிரட்டுவதுபோல் இருந்தாலும், குழந்தை மனதுடையவர்களாகவே இருப்பர். சட்டையை மாற்றுவதுபோல் அடிக்கடி தொழில்களை மாற்றிக் கொண்டேயிருப்பார்கள். அதேநேரம், எந்த நிறுவனத்தில் வேலை செய்தாலும் நிறுவனத் தலைவரே இவர்தானோ என்று நினைக்கும் அளவிற்கு ஈடுபாட்டுடன் உழைப்பீர்கள்.

உங்களின் புரட்சிகரமான பேச்சினால் ஈர்க்கப்பட்டு பலர் நண்பர்களாகி விடுவர். இல்லாதவர்களுக்கு உதவுவதில் உங்களுக்கு விருப்பம் அதிகம். எதையும் கேள்வி ஞானத்தால் ஈர்த்து, அனைத்தும் தெரிந்தவர்களைப் போல் வெளிப்படுத்துவது முக்கியமான குணாதிசயம். இந்த ராகு-கேது பெயர்ச்சியால் சுணக்க நிலை மாறும். பெரிய முதலீடுகளை கவனமுடன் செய்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் கிடைக்கவேண்டிய உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். பணவரவு தேவைக்கேற்றபடியிருக்கும். கணவன்-மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றிமறையும். குடும்ப ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். சொந்த வீடு, வாகனம் வாங்கும் யோகமும் அதனால் கடன்களும் உண்டாகும். உற்றார், உறவினர் ஓரளவுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள்.

வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பொதுநல காரியங்களில் ஈடுபடுவீர்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது, ஆரோக்கிய விஷயத்தில் கவனமாய் இருப்பது, உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் – மனைவியிடையே விட்டுக் கொடுத்து அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவியிடையே விட்டுக் கொடுத்து அனுசரித்து நடப்பது நல்லது. உற்றார், உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். சுப காரியங்களில் தாமதம் உண்டாகும். பொருளாதார நிலை ஓரளவுக்குச் சிறப்பாக இருக்கும் என்றாலும் கொடுக்கல்வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவது, பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. வழக்குகளில் சாதகமான நிலை உண்டாகும்.

முடிந்தவரை தேவையற்ற பிரச்னைகளில் தலையிடாதிருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகளால் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கைநழுவிப் போகும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படமாட்டார்கள். அரசு வழியிலும் சிறுசிறு நெருக்கடிகள் உண்டாகும். தொழிலில் மந்தநிலை ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் போது கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு நெருக்கடிகள் அதிகரிக்கும் காலம் என்பதால் பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. வீண் பழிச்சொற்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வுகளை பிறர் தட்டிச்செல்வர். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு தாமதமாக கிடைக்கும்.

அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப் பெற, வாக்குறுதிகளைக் காப்பாற்றுவது நல்லது. பெயர், புகழுக்கு இழுக்கு நேராதபடி பேச்சில் நிதானத்தைக் கடைபிடிக்கவும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவு செய்யவேண்டியிருக்கும். அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள். உடல் நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்துமென்றாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்படமுடியும். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது சிந்தித்துச் செயல்படுவது நல்லது. வரவேண்டிய பணத்தொகைகளிலும் இழுபறி இருக்கும்.

தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன் உண்டாகும். சுக வாழ்க்கை பாதிப்படையும். மாணவ, மாணவியருக்கு கல்வியில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். விளையாட்டுப் போட்டிகளின்போது கவனம் தேவை. தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது. பொதுவாக உடல் ஆரோக்கியம் ஓரளவுக்குச் சுறுசுறுப்பாக இருக்கும். அவ்வப்போது ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டாலும் சிறிதளவு மருத்துவச் செலவுக்குப்பின் குணமாகும். எந்த காரியத்திற்கும் அதிக உழைப்பு, அலைச்சலை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

பரிகாரம்:

அடிக்கடி அருகிலிருக்கும் அம்மன் ஆலயத்திற்குச் சென்று வணங்கி வரவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்:

“ஓம் தும் துர்க்காயை நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 18 முறை கூறவும்.

மலர் பரிகாரம்:

செவ்வரளி மலரை அம்மனுக்கு அர்ப்பணித்து வணங்கவும்.

சிறப்பான கிழமைகள்:

ஞாயிறு, புதன்.

அனுகூலமான திசைகள்:

தெற்கு, வடமேற்கு.

அதிர்ஷ்ட எண்கள்:

2, 4.

5, 14, 23 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கானது

27.7.2017 முதல் 13.2.2019 வரை

புதனின் ஆதிக்கத்தில் பிறந்து, அறிவால் காரியத்தில் வெற்றி கொள்ளும் ஐந்தாம் எண் அன்பர்களே, நீங்கள் ஆற்றல், அதிக உழைப்பு மனித நேயம், எதையும் சாதிக்கும் வல்லமை கொண்டவர்கள். எதிலும் வேகத்தை காட்டுவீர்கள். தங்களின் உத்வேக செயல்பாட்டிற்கு மற்றவர்கள் ஒத்து வரவில்லையானால் அவர்களை சோம்பேறி’ என்று வசைபாடுவீர்கள். உங்களின் மூளை, சாட்டிலைட்டிலிருந்து சக்தி பெற்றதுபோல் செயல்படும். எதிலும் பரபரப்பாக இயங்குபவர். ஏதாவது ஒன்றை கண்டுபிடித்த வண்ணமிருப்பர். முடியாத சில காரியங்களைக்கூட சாதித்து விடுவேன் என்று குழந்தை போல் சவால் விடுவீர்கள். மொத்தத்தில் பிடிவாதம் அதிகம். அடுத்தவரால் செய்ய முடியாத காரியங்களை செய்து பெயர்பெற விரும்புபவர். ஒரே இடத்தில் இருக்கப் பிடிக்காத நீங்கள் வெளியூர் பயணத்தை அதிகம் விரும்புவீர்கள். இயற்கைச் சூழ்நிலைகள் மிகவும் ஈர்க்கும்.

இந்த ராகுகேது பெயர்ச்சியில், எடுத்த முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். பணவரத்தில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத வகையில் உதவிகள் கிட்டும். குடும்பத்தில் சுபவிரயங்கள் ஏற்படும் என்பதால் கடன் வாங்க வேண்டியிருக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் ஏற்படும். உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். கணவன்மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் தோன்றிமறையும். தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றமான நிலை ஏற்படும். கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும் என்றாலும் வேலைப்பளு அதிகமாக இருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. எதையும் சமாளித்து, ஏற்றம் பெறுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். வம்பு, வழக்குகளில் சாதகமான பலன் உண்டாகும்.

குடும்பத்தின் பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத சுபச்செலவுகள் ஏற்படும். வீண் விரயங்கள் அதிகரிக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் தடை, தாமதங்களுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். பணவரவு சிறப்பாக இருந்தாலும் வீண் செலவுகள் அதிகரிக்கக்கூடிய காலம் என்பதால் முடிந்தவரை பெரிய தொகைகளை கொடுக்கல்வாங்கலில் ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. கொடுத்த கடன்களை திரும்பப்பெறுவதில் தடைகள் ஏற்படும். வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும். தேவையற்ற பிரச்னைகளில் தலையிடாதிருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு சுமாரான நிலை உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது சிந்தித்துச் செயல்படுவது நல்லது.

அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைப்பதால்் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு அனுகூலம் பெறலாம். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் தாமதப்படும். பிறர் விஷயங்களில் தலையிடாதிருந்தால் வீண் பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம். புதிதாக வேலைதேடுபவர்கள் கிடைத்த வேலையைப் பற்றிக்கொள்ளுங்கள்.
அரசியல்வாதிகள் பெயர், புகழுக்கு இழுக்கு நேராமல் பாதுகாத்துக்கொள்ளவேண்டிய நேரம் என்பதால் எல்லா விஷயங்களிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. அரசுவழியில் வீண் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

மக்களின் ஆதரவு ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் எதையும் எதிர்கொண்டு வெற்றிபெற முடியும். பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சலை குறைத்துக்கொள்ளலாம். பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும். உணவு விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. பணவரவு தேவைக்கேற்றபடி இருந்தாலும் வீண் விரயங்கள் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு வரன்கள் அமைவதில் தாமதம் ஏற்படும். அசையும் அசையா சொத்துகளை வாங்கும் முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். கலைஞர்களுக்கு, ரசிகர்களின் ஆதரவு சிறப்பாகவே இருக்கும். கிடைத்த வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.வரவேண்டிய பணத்தொகையில் இழுபறி இருக்கும்.

மாணவ, மாணவியர் கல்வியில் முன்னேற்றம் பெறமுடியும். சிறுசிறு இடையூறுகள், தேவையற்ற நட்பு வட்டாரங்கள் ஏற்படுவதால் அவ்வப்போது கல்வியில் மந்தநிலை தோன்றினாலும் எதையும் சமாளித்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பயணங்களில் கவனமுடனிருப்பது நல்லது. பொதுவாக உடல்நலத்தில் பாதிப்புகள் உண்டாகக்கூடும். குடும்பத்தார்களால் மருத்துவச் செலவுகள் ஏற்படுவதால் மனநிம்மதி குறையும். நீண்டநாள் நோய்க்காக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது என்றாலும் பெரிய கெடுதியில்லை.

பரிகாரம்:

தினமும் பெருமாளை வணங்கவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்:

“ஓம் நமோ நாராயணாய” என்ற மந்திரத்தை தினமும் 6 முறை சொல்லவும்.

மலர் பரிகாரம்:

துளசியை பெருமாளுக்கு சாத்தி வணங்கவும். சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, புதன், வியாழன்.

அனுகூலமான திசைகள்:

தெற்கு, தென்கிழக்கு.

அதிர்ஷ்ட எண்கள்:

4, 5.

6, 15, 24 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கானது

27.7.2017 முதல் 13.2.2019 வரை

கலைகாரகனான சுக்கிரனை நாயகனாகக் கொண்ட ஆறாம் எண் அன்பர்களே, இயற்கையின் இன்ப ரகசியங்களை இனிமையாக வாழ்வில் ரசித்து அனுபவிப்பவர்கள் நீங்கள். நல்ல பண்பும் தெய்வீகமும், தனித்துவமும், அழகு சாதனங்களில் நாட்டமும், சுகத்தை அனுபவிப்பதிலும், பிறரைக் கவர்வதிலும் வல்லவர்கள். கலைத்துறையில் மிகுந்த நாட்டமுடையவர்கள். சினிமா, தொலைக்காட்சித் துறைகளில் உங்கள் பங்கு பெரும்பான்மையானது. புதுப்புது வகைகளில் வடிவமைப்புச் செய்து ஆடை, ஆபரணத்துறையில் பெரும் பெயர் பெறுபவர்கள். எந்தக் காரியத்தை எடுத்தாலும் முடிக்காமல் விடமாட்டீர்கள். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். நண்பர்களுக்கு மிக அதிகமாகவே செலவிடுவீர்கள் நட்சத்திர ஓட்டல்களில் ஜமாய்ப்பீர்கள்.

இயற்கையின்மேல் மிகுந்த நாட்டமுடைய நீங்கள் குளிர்ச்சியான இடங்களில் அதிகமான நேரத்தைக் கழிப்பவர்கள். எதற்கும் அஞ்சாத நீங்கள் கண்ணாடியில் அடிக்கடி தன் முகத்தைப் பார்த்து, இதைவிட அழகாக இருந்திருக்கலாமோ என்று வருத்தப்படுவர்கள். பூலோக வாழ்வே சிறந்தது என்றும் இதில்தான் அனுபவிக்க ஏராளமான விஷயங்கள் உண்டு என்றும் நினைப்பவர்கள். இந்த ராகுகேது பெயர்ச்சியில் உங்களுக்கு தேவையற்ற அலைச்சல் அதிகரிக்கும். உடல்நலத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். குடும்பத்தாரால் மருத்துவச் செலவு ஏற்படும். கணவர்மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் உண்டாகும். உற்றார், உறவினரை அனுசரித்துச் செல்லவேண்டியிருக்கும், திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத பலன் ஏற்படும்.

பணவரவில் நெருக்கடி நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துகளால் வீண்பிரச்னைகளை சந்திப்பீர்கள். ஆனால், எதையும் சமாளிக்கும் திறன் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்திலும் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் இருக்கும் வாய்ப்புகளை நழுவவிடாதிருப்பது நல்லது. கூட்டாளிகளும், தொழிலாளர்களும் ஓரளவு ஒற்றுமையுடன் செயல்படுவார்கள் பணவரவில் நெருக்கடி நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துகளால் வீண்பிரச்னைகளை சந்திப்பீர்கள். ஆனால், எதையும் சமாளிக்கும் திறன் உண்டாகும்.

ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்திலும் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் இருக்கும் வாய்ப்புகளை நழுவவிடாதிருப்பது நல்லது. கூட்டாளிகளும், தொழிலாளர்களும் ஓரளவு ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும்.
பொருளாதார நிலை சுமாராக இருக்கும். வாங்கிய பணத்தை திருப்பித்தருவதில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கொடுத்ததைக்கேட்டால் அது பகையாக மாறும். வழக்குகளில் இழுபறி நிலை நீடிக்கும். பூர்வீக சொத்துகளால் வீண் செலவுகளும், நெருக்கடிகளும் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றாலும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் லாபம் குறையும். உடனிருப்பவர்களே தேவையற்ற பிரச்னைகளை
ஏற்படுத்துவார்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பையும் பெறமுடியாமல் போகும். சிந்தித்து நிதானமுடன் செயல்பட்டால் லாபம் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.

பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிலும் திறம்படச் செயல்படுவீர்கள். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வு தாமதப்பட்டாலும், உத்தியோக உயர்வு கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி உண்டாகும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையிடாதிருப்பதும், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல் உண்டாகும். அரசியல்வாதிகள் மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை பூர்த்திசெய்தால் பதவிக்கு பங்கம் ஏற்படாது பார்த்துக்கொள்ள முடியும். கட்சிப்பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்ள வேண்டிவருவதால் அலைச்சல் அதிகரிக்கும். உடல்நிலையில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. வாக்குறுதிகள் கொடுக்கும்போது சிந்தித்துச் செயல்படவும். பெண்கள் உடல்நலத்தில் கவனமெடுப்பது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்துச் செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது உத்தமம்.

குடும்ப பிரச்னைகளை வெளிநபர்களிடம் பகிர வேண்டாம். மணவயதை அடைந்தவர்களுக்கு மணமாக சில தடைகள் ஏற்படும். பணவரத்து சுமாராக இருக்கும்.
கலைஞர்களுக்குப் பயணங்களால் அலைச்சல், உடல் சோர்வும் ஏற்படும். சொகுசு வாழ்வில் பாதிப்பு ஏற்படும். நினைத்ததை நிறைவேற்ற முடியாத சூழ்நிலைகள் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. மாணவ, மாணவியர்களுக்கு கல்வியில் மந்தநிலை உண்டாகும் காலமிது என்பதால் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. கல்விரீதியாக மேற்கொள்ளும் எந்த காரியத்திலும் தடை ஏற்படும். தேவையற்ற நட்புகள் உங்களை வேறுபாதைக்கு அழைத்துச்செல்லும். எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். பொதுவாக தேவையற்ற அலைச்சல், டென்ஷன் உண்டாகக்கூடிய காலம் என்பதால் உடல்நலத்தில் அடிக்கடி பாதிப்பு உண்டாகும். உடல் சோர்வடையும். குடும்பத்திலுள்ளவர்களுக்கும் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். எதிர்பாராத வீண் விரயங்களும் ஏற்படும்.

பரிகாரம்:

தினமும் மஹாலக்ஷ்மியை வணங்கவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்:

“ஓம் ஸ்ரீமஹாலக்ஷ்மியை நஹ” என்ற மந்திரத்தை தினமும் 21 முறை சொல்லவும்.

மலர் பரிகாரம்:

மல்லிகைசரத்தை லக்ஷ்மிக்கு சாத்தி வணங்கவும்.

சிறப்பான கிழமைகள்:

புதன், வெள்ளி.

அனுகூலமான திசைகள்:

தெற்கு, வடகிழக்கு.

அதிர்ஷ்ட எண்கள்:

6, 9.

7, 16, 25 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கானது

27.7.2017 முதல் 13.2.2019 வரை

ஏழாம் எண்ணில் பிறந்த நீங்கள் கேதுவை நாயகனாகக் கொண்டவர்கள். சர்வ ஞானமும், கல்வியும், நளினமும், நல்வார்த்தைகளும், நற்செயலும், இமயம் போன்ற தெய்வீகத் தன்மையும் கூடவே குழப்பங்களுக்கு ஆளாகும் குணமும் கொண்டவர்கள் நீங்கள். உங்கள் அறிவுரையால் உயர்ந்தவர்கள் பலர். வசீகரமான முகமும் மென்மையான குணமும் கொண்டவர்கள். தொட்டாற்சிணுங்கிபோல் அடிக்கடி நாணிக்கோணிக் கொள்பவர். நண்பர்கள் மிகக் குறைவு. நேர்த்தியான ஆடை, அணிகலன்கள் மிகவும் பிடிக்கும். துன்பங்களை மனதிற்குள்ளேயே வைத்துப் புழுங்குவதால், ரத்த அழுத்த நோய்க்கு மிக இலகுவாக ஆட்படுபவர்கள். பலநேரங்களில் மாபெரும் வெற்றிகளை மிகச்சாதாரணமாகப் பெறுவீர்கள். மனம், ஞானத்தைத் தேடி அலையும். பின்னாளில் நடக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே தெளிவாக எடுத்துரைப்பவர் நீங்கள்.

போதனை, குறிசொல்வது, பொருள் வரவழைத்தல், யாருக்கும் புலப்படாத விஷயங்களை ஆராய்வது போன்றவற்றால் பிறரை எளிதில் கவர்வீர்கள். அமைதி, ஈகைகுணம், மனோபலம், நாட்டுப்பற்று உடைய நீங்கள், சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள். இந்த ராகுகேது பெயர்ச்சியால் மறைமுக எதிர்ப்புகள் மறையும்.வழக்குகள் முடிவிற்கு வரும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும் சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றிகிட்டும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் அனுகூலம் உண்டாகும். செய்யும் தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு லாபம் அமையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வெளிவட்டார பழக்கவழக்கங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. எந்த எதிர்ப்பையும் மீறி வெற்றி பெறுவீர்கள்.

கணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உடல்நலத்தில் வயிற்று பாதிப்புகள், அஜீரணக் கோளாறு
ஏற்பட்டு மருத்துவச் செலவுகளை உண்டாக்கும். அனைவரிடமும் விட்டுக்கொடுத்துச் செல்வதும், பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பதும் நல்லது. உற்றார், உறவினரால் வீண்பிரச்னைகளை சந்திப்பீர்கள். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். திருமணம் போன்ற சுபவிசேஷ முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். பணவிஷயத்தில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பதினால் வீண்பிரச்னைகளில் சிக்கிக் கொள்வீர்கள். நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். வீண் வம்பு, வழக்குகள் ஏற்படும். தொழில், வியாபாரம் சுமாராகத்தான்நடைபெறும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் மிகவும் கவனம் தேவை.

புதிய கூட்டாளிகளால் தேவையற்ற மனசஞ்சலங்கள் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது கவனமுடனிருப்பது நல்லது. பயணங்களால் அலைச்சல் ஏற்படும். பணியில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். செய்யும் பணியில் இடையூறுகள் உண்டாகும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைப்பளுவை குறைத்துக்கொள்ள முடியும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்பட்டு அலைச்சல் அதிகரிக்கும். உயரதிகாரிகளிடம் பேசும்போது நிதானமுடனிருப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு மக்களின் ஆதரவு சிறப்பாக இருந்தாலும் அவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதில் இடையூறுகள் உண்டாகும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்தாலும் எந்தவொரு காரியத்திலும் திருப்தி இருக்காது. உடன் பழகுபவர்களுடன்
எச்சரிக்கையுடனிருப்பது நல்லது.

பெண்கள் உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படுவதால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்பட முடியாமல் போகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கணவன்மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றிமறையும். கலைஞர்கள் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் கிடைத்த வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. வரவேண்டிய பணத்தொகைகளில் இழுபறி ஏற்பட்டாலும் வரவேண்டிய நேரத்தில் வந்து சேரும். உடனிருப்பவர்களிடம் பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. மாணவ, மாணவியருக்குக் கல்வியில் மந்தநிலை உண்டாகும். முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நற்பலனை அடையலாம். தேவையற்ற நட்புகளால் வீண் பிரச்னைகளுக்கு ஆளாவீர்கள். வாகனங்களில் பயணம் செய்யும்போது கவனம் தேவை. பொழுதுபோக்குகளாலும் கல்வியில் நாட்டம் குறையும். உடல்நலத்தில் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் தோன்றியபடியே இருக்கும். மனக்குழப்பம், நிம்மதிக்குறைவு உண்டாகும். குடும்பத்தாரால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும்.

பரிகாரம்:

தினமும் விநாயகரை வணங்கவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்:

“ஓம் ஸ்ரீவிநாயகாய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 16 முறை சொல்லவும்.

மலர் பரிகாரம்:

அறுகம்புல்லை தினமும் விநாயகருக்கு சாத்தி வணங்கவும்.

சிறப்பான கிழமைகள்:

ஞாயிறு, வியாழன்.

அனுகூலமான திசைகள்:

தெற்கு, கிழக்கு.

அதிர்ஷ்ட எண்கள்:

1, 3, 7.

8, 17, 26 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கானது

27.7.2017 முதல் 13.2.2019 வரை

மனக்கட்டுப்பாட்டால் வாழ்க்கையில் முன்னேறும் எட்டாம் எண் அன்பர்களே, நீங்கள் கர்ம தொழில்காரகன் சனியை நாயகனாகக் கொண்டவர்கள். சுயமரியாதைக் கருத்துகளால் மக்களைக் கவர்வீர்கள். நற்குணம் உடையவர்கள். பிறருக்காக உழைக்கும் உத்தமசீலர்கள். தோல்வியைத்தான் சந்தித்து வருகிறாமோ என குழம்பி அஞ்சுவீர்கள். தாமரை இலைத் தண்ணீர்போல வாழ்க்கைப் பயணத்தை ஓட்டிக்கொண்டிருப்பீர்கள். தங்களுக்குள்ளேயே கேள்வி கேட்டு, தீர்வைப்பெற்று வாழ்வில் உடனடியாக உயர்ந்துவிடுவீர்கள். உடல்நலத்தில் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிறிய நோய் என்றாலும் உரிய சிகிச்சையை உடனடியாக எடுத்துக்கொள்வது நல்லது. அடுத்தவருக்கு உதவும் மனப்பாங்காலும், மதிநுட்பத்தாலும் வாழ்வில் வெற்றிமேல் வெற்றி பெறுவது உறுதி. எண்ணற்றவர்கள் போராடி அடையும் வாழ்வின் உச்சக்கட்ட வளர்ச்சியை, நீங்கள் எளிதில் எட்டிவிடுவீர்கள். மனோதிடத்துடன் எந்த இலக்கையும் நோக்கிப் பயணிக்கும் இவர்களுக்கு நேர்மறை நிகழ்வுகள்தான் ஏராளமாக நடக்கும்.

இந்த ராகுகேது பெயர்ச்சியில் முயற்சிகளில் வெற்றியும், குடும்பத்தில் முன்னேற்றமும் உண்டாகும். உடல்நலத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படலாம். திருமண சுபகாரியங்களில் சிறுசிறு தடைகளுக்குப்பின் வெற்றிகிட்டும். பொருளாதாரம் தேவைக்கேற்றபடியிருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பணம் கொடுக்கல், வாங்கலில் கவனமுடன் இருப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல் அதிகரிக்கும். கணவன்மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை எதிர்கொண்டாலும் முன்னேற்றம் அடையமுடியும். எந்த விஷயத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. குடும்ப சூழ்நிலை ஓரளவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். அசையும், அசையா சொத்துகளால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.

பணவரத்தில் சுமாரான நிலையே இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைக்கவும். பொருளாதாரம் தேவைகேற்றபடி இருந்தாலும் கொடுக்கல், வாங்கலில் பெரிய தொகைகளை பிறரை நம்பி கடனாகக் கொடுப்பதை தவிர்க்கவும். பண விஷயத்தில் வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றால் வீண்பிரச்னைகளை சந்திப்பீர்கள். தேவையற்ற வம்பு, வழக்குகள் உண்டாகி மனசஞ்சலம் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் குறைந்தாலும் வரவேண்டிய வாய்ப்புகளுக்கு தடை இருக்காது. நிறைய போட்டிகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்துவிடுவது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்குப்பின் கிடைக்கும். பணியில் வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு அதைக் குறைக்கும். பிறர் விஷயங்களில் தலையிடாமலிருப்பது நல்லது.

எதிர்பார்க்கும் ஊதிய உயர்வு தாமதப்படும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை ஏற்பதே சிறப்பு. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம், அலைச்சலை ஏற்படுத்தும். அரசியல்வாதிகள் மக்களின் தேவையறிந்து செயல்பட்டால் பெயர், புகழை காப்பாற்றிக்கொள்ள முடியும். கட்சிப் பணிகளுக்காக நிறைய வீண் செலவுகளை செய்யவேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மேடைப் பேச்சுகளில் கவனம் தேவை. உடன் பழகுபவர்களை நம்பி எந்த காரியத்தையும் ஒப்படைக்காமலிருப்பது உத்தமம். பெண்களுக்கு உடல்நலத்தில் வயிறு, சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தோன்றிமறையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தடைகள் ஏற்படும். பணவரத்தில்நெருக்கடி உண்டாகக்கூடிய காலம் என்பதால் ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கவும்.

கலைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள் கிடைத்தாலும் அது தகுதிக்கேற்றதாக இருக்காது. ரசிகர்களின் ஆதரவு குறையாமலிருப்பதால் எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடமுடியும். கார், பங்களா வாங்கும் முயற்சிகளில் கடன்கள் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. மாணவ, மாணவியருக்குக் கல்வியில் மந்தமான நிலையே இருக்கும். எதிர்பார்க்கும் மதிப்பெண்களைப் பெற அதிக முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை உங்களை வேறுபாதைக்கு அழைத்துச் செல்லுமென்பதால் நண்பர்கள் விஷயத்தில் கவனம் தேவை. பொதுவாக உடல்நலத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். உணவு விஷயங்களில் கவனமுடனிருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சலைக் குறைத்துக் கொள்ள முடியும்.

பரிகாரம்:

தினமும் முன்னோர்களை வணங்கவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்:

“ஓம் ஸ்ரீகோவிந்தாய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லவும்.

மலர் பரிகாரம்:

மரிக்கொழுந்தை தினமும் ஆஞ்சநேயருக்கு சாத்தி வணங்கவும்.

சிறப்பான கிழமைகள்:

திங்கள், புதன், வெள்ளி.

அனுகூலமான திசைகள்:

தெற்கு, தென்கிழக்கு, வடமேற்கு.

அதிர்ஷ்ட எண்கள்:

1, 5, 6.

9, 18, 27 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கானது

27.7.2017 முதல் 13.2.2019 வரை

தைரியம், துணிச்சலுடன் காரியங்களை சாதிக்கும் திறன் கொண்ட ஒன்பதாம் எண் அன்பர்களே, நீங்கள் செவ்வாயை நாயகனாகக் கொண்டவர்கள். எதிலும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற கொள்கை கொண்டிருப்பவர். அறிவாற்றல்மிக்கவர். பயமுறுத்தும் பேச்சையும், படாடோபமான செயல்களையும், வேகமான முடிவுகளையும், எதிலும் புகுந்து கலக்கும் ஆற்றலையும் கொண்டவர்கள். கலகலவென சிரித்துப் பேசி, வேலைகளை எளிதில் முடித்துக் கொள்பவர்கள். சிலநேரங்களில் மிகக் கடுமையான வேலையையும் எளிதாக முடிப்பவர்கள். முதன்மைப் பதவிகளை மட்டுமே விரும்புவர். அதீத சுறுசுறுப்பும், வேகமும், துணிவும் கொண்ட உங்களை உணவு வகைகளைக் காட்டியே மயக்கி விடலாம். அவ்வளவு ருசித்து உண்பவர்கள். மாமிச உணவு மிகவும் பிடிக்கும். நீதி, நேர்மை, ஒழுங்கு, கட்டுப்பாட்டை விரும்பும் நீங்கள் மற்றவர்களும் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று அடக்குமுறை காட்டுபவர்கள்.

மிடுக்கான தோற்றம் கொண்ட நீங்கள் வாகனங்களை வேகமாகச் செலுத்துவதில் மிகுந்த விருப்பம் கொண்டவர்கள். சாதாரணமாக வாகனத்தைச் செலுத்துவதே பந்தயம் மாதிரித்தான் இருக்கும். திறமையையும், உழைப்பையும் மூலதனமாகக் கொண்ட நீங்கள், சோம்பேறிகளைக் கண்டால் வெறுத்து ஒதுக்குவீர்கள். காவல்துறையிலும், ராணுவத்திலும், உணவுக் கூடங்களிலும், பாதுகாப்புச் சேவைகளிலும் அதிகமாக ஈடுபடுவர்கள். இந்த ராகுகேது பெயர்ச்சியில் பணவரவு திருப்திகரமாக இருக்கும். இதுவரை தடைபட்ட திருமணம் போன்ற சுப காரியங்கள் தடைவிலகி இனிதாக நடைபெறும். புத்திர பாக்கியத்தை எதிர்பார்த்திருந்தவர்களுக்கு அந்தப் பேறு கிட்டும். பலர் சொந்தமாக வீடு, வாகனம் வாங்கி மகிழ்வர். பூர்வீக சொத்துகளால் லாபம் அடைவர். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கணவன்மனைவி இடையே ஒற்றுமை பலப்படும்.

உடல்நலத்தில் கவனம் தேவை. செய்யும் தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலையில் எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு பெற்று மனமகிழ்வர்.
குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும்.பணவரவு சிறப்பாக இருக்கும். திருமணம் போன்ற சுபச்செலவுகள் உண்டாகும். பூர்வீக சொத்துகள் கைக்கு கிடைக்கும். இதன்மூலம் உங்கள் பொருளாதார நிலை சீராகும். பிறரை நம்பி பெரிய தொகையைக் கடனாக கொடுக்கும்போது சிந்தித்துச் செயல்பட வேண்டும். உடனிருப்பவர்களே பணவிஷயத்தில் துரோகம் செய்யத் துணிவார்கள். தொழில், வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். நவீன கருவிகளை வாங்க அரசு வழியில்
கடனுதவிகள் கிடைக்கும். புதிய கூட்டாளிகளும் சேருவார்கள். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும்.

செய்யும் பணியில் உயர்வான நிலை ஏற்படும். கௌரவமான பதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு பெயர், புகழ், கௌரவம் யாவும் தேடிவரும். மக்களின் ஆதரவைப்பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. உங்கள் பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் உயரும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். பண வரவுக்கும் பஞ்சம் ஏற்படாது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பெண்கள் உடல்நலம் சுமாராக இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். புத்திரவழியில் மகிழ்ச்சி நிலவும். கணவன்-மனைவி உறவில் அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பொன், பொருள் சேரும்.

உற்றார், உறவினரை அனுசரித்துச் செல்வது நல்லது. கலைஞர்கள் திறமைக்கேற்ற கதாபாத்திரங்கள் கிடைக்கப்பெற்று ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இதுவரை நிலுவையிலிருந்த பணத்தொகைகளும் கைக்கு கிடைக்கும். சொகுசான வாழ்வு சிறப்பாக அமையும். புதிய கார், பங்களா போன்றவற்றை வாங்குவீர்கள். மாணவ, மாணவியர் கல்வியில் நல்ல முன்னேற்றம் பெறுவீர்கள். திறமைக்கேற்ற மதிப்பெண்களைப் பெற்று பெருமையடைவீர்கள். விளையாட்டுப் போட்டிகளிலும் பரிசுகளையும் பாராட்டுகளையும் பெறுவீர்கள். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். பொதுவாக உடல்நலத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் அன்றாட பணிகளை திறம்பட செய்து முடிக்க முடியும். குடும்பத்திலுள்ளவர்களும் சில நேரங்களில் மருத்துவச் செலவுகளை ஏற்படுத்துவார்கள். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்.

பரிகாரம்:

தினமும் முருகனை வணங்கவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்:

தினமும் கந்த சஷ்டி கவசம் சொல்லவும்.

மலர் பரிகாரம்:

செவ்வரளி மலரை தினமும் முருகனுக்கு அர்ப்பணித்து வணங்கவும்.

சிறப்பான கிழமைகள்:

திங்கள், செவ்வாய், வியாழன்.

அனுகூலமான திசைகள்:

தெற்கு, மேற்கு.

அதிர்ஷ்ட எண்கள்:

1, 3, 9.

Comments

comments

Related posts