வெளியான அதிர்ச்சி செய்தி – பாதிக்கப்பட்ட தமிழ் பெண்களிடம் பாலியல் லஞ்சம் கோரும் அதிகாரிகள்

வடபகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்கள் தலைமையிலான குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் போது பாலியல் லஞ்சம் கோரப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரச மற்றும் அரசசார்பற்ற அமைப்புகளின் அதிகாரிகளினால் பெண்களிடம் பாலியல் லஞ்சம் பெற்றுக் கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக, வடக்கில் செயற்படும் தன்னார்வ அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடக்கில் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் கணவனை இழந்த பெண்களே அதிகம் உள்ளனர். வீடு வழங்குதல் , சுய தொழில் வாய்ப்புகள் வழங்குதல், ஆடு மற்றும் கோழி வளர்ப்பு உள்ளிட்ட வாழ்வாதார உதவிகளை வழங்கும் போது, பாலியல் லஞ்சம் கோரப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிகாரிகள் பாலியல் லஞ்சம் கோருகின்ற போதிலும் இது தொடர்பில் இதுவரையில் 5 முறைப்பாடுகள் மாத்திரமே கிடைத்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்படும் பெண்கள், தமிழ் கலாச்சாரம் மற்றும் அவமானம் காரணமாக தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக முறைப்பாடு செய்வதில்லை என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளை அதிகாரிகளுக்கு எதிராக முறைப்பாடு செய்யும் பட்சத்தில், கிடைக்கும் வாழ்வாதார உதவிகள் கிடைக்காமல் போய்விடும் என்ற அச்சமும் பாதிக்கப்பட்ட பெண்களிடம் உள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Comments

comments

Related posts