அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க திடசங்கல்ப்பம் செய்தது வடகொரியா

ஐக்கிய நாடுகள் சபையில் தமக்கு எதிராக புதிய தடைகள் கொண்டுவரப்பட்டதற்கு அமெரிக்கா மீது பதிலடி கொடுக்கப்படும் என வட கொரியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் கடந்த சனிக்கிழமை ஏகமனதாக பொருளாதார தடைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது “எமது இறைமையை கடுமையாக மீறும் செயல்” என்று வட கொரியாவின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிக்கும் கோரிக்கையை வட கொரியா நிராகரித்துள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. வட கொரியாவின் மீதான தடையால் அந்த நாட்டின் மூன்றில் ஒரு ஏற்றுமதி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது.

பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்திய வட கொரியாவின் அண்மைய ஏவுகணை சோதனைகளை அடுத்தே அந்த நாட்டின் மீது பொருளாதார தடை கொண்டுவரப்பட்டுள்ளது.

இதற்கு நேற்று முதல் முறையாக பதிலளித்திருக்கும் வட கொரியா, தனது அணு ஆயுத திட்டத்தை தொடர்ந்து மேம்படுத்துவதாக உறுதி அளித்துள்ளது.

அமெரிக்காவின் அச்சுறுத்தல் காரணமாக நாம் எமது தற்பாதுகாப்பு அணு திட்டத்தை பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டுவரமாட்டோம் என்று வட கொரியா கூறியுள்ளது.

“அமெரிக்கா அதன் குற்றத்திற்கு ஆயிரம் ஆயிரம் மடங்குகள் விலை கொடுக்கும்” என்று வட கொரியாவின் எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவில் வட கொரிய மற்றும் தென் கொரிய வெளியுறவு அமைச்சர்கள் குறுகிய நேர சந்திப்பொன்றில் பங்கேற்றதாக செய்தி வெளியான நிலையிலேயே இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

இதன்போது தென் கொரிய வெளியுறவு அமைச்சர் காங் கியுங் வா, வட கொரிய வெளியுறவு அமைச்சர் ரி யோங் ஹோவுனுடன் கைலாகு கொடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தென் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென்கிழக்காசிய நாடுகளின் சம்மேளன (ஆசியான்) மாநாட்டின் இரவு விருந்து நிகழ்வின்போது முன்னேற்பாடு இல்லாத இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

Comments

comments

Related posts