2009 இற்கு முன்னரான காலப்பகுதியை நோக்கி நகரும் யாழ்ப்பாணம்

கடந்த சில நாட்களாக வட மாகாணத்தில் வாள்வெட்டு, துப்பாக்கிச்சூடு, பொலிஸார் மற்றும் படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து காணப்படுவது நாம் அனைவரும் அறிந்த விடயமே.

இந்த நிலையில் நேற்றைய தினம் வடமராட்சி, துன்னாலை பகுதியில் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பு மற்றும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை அப்பகுதி மக்கள் மத்தியில் அச்ச உணர்வினை ஏற்படுத்தியிருந்தது.

இந்த சுற்றிவளைப்பின் போது சிலர் கைது செய்யப்பட்டதோடு, உரிய ஆவணங்கள் இல்லை என ஒரு சில வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையானது வட மாகாணத்தில் 2009 இற்கு முன்னதான யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியை மனக்கண் முன் எடுத்து வந்துள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அத்துடன், வலிகாமம் தெற்கு, ஏழாலை, குப்பிளான், மயிலங்காடு, புன்னாலைக்கட்டுவன், ஈவினை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய விசேட அதிரடிப்படையினரும், பொலிஸாரும் குவிக்கப்படிருந்தனர்.

இதேவேளை சந்தேகத்திற்கிடமான முறையில் வீதியால் பயணிக்கும் பொதுமக்கள் இடை மறிக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அடையாள அட்டை, வாகன அனுமதிப்பத்திரம் என்பன பரிசோதிக்கப்பட்டிருந்தன.

வட மாகாணத்திலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றுமாறு தமிழ் தலைமைகள் உட்பட பலரும் வலியுறுத்தி வரும் நிலையில் யாழில் நடைபெற்று வரும் சம்பவங்கள் இராணுவத்தினரின் நிலைநிறுத்தலை உறுதிப்படுத்திக் கொண்டிருப்பதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை, சில நாட்களுக்கு முன்பு, யாழ். குடாநாட்டின் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்துள்ளதாகவும் அங்கு பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர், பொலிஸார் ஆகியோரின் உயிருக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இராணுவம் மற்றும் பொலிஸாரின் உயிருக்கு உத்தரவாதம் அளிப்பது அரசின் பொறுப்பாகும். ஆனால், இதை அரசு கண்டுகொள்ளாமல் இருக்கின்றது.

மஹிந்தவின் ஆட்சியில் யாழ். குடாநாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. அந்த காலப்பகுதியில் இராணுவத்தினரும், பொலிஸாரும் தங்கள் கடமைகளை அச்சுறுத்தல் இல்லாமல் செய்தாக சுட்டிக்காட்டியிருந்தார்.

இதேபோன்று, யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில்,

கொக்குவில் பகுதியில் வைத்து பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி என தெரிவித்திருந்தார்.

அத்துடன், குறித்த நபர் ஆவா குழுவுடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்த அவர், இதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையின் உதவிகளையும் நாடவுள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை, இந்த நடவடிக்கையின் மூலம் குற்றச் செயல்களை வெகுவாக குறைக்க முடிவதுடன், நிலைமைகளை விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியுமென கூறியிருந்தார்.

ஆனால், குறித்த செயற்பாடு வடக்கு மாகாணத்தில் இராணுவமயப்படுத்தலை நியாயமாக்கும் செயற்பாடு எனத் தமிழ் அரசியல் வாதிகள் குற்றம் சாட்டியிருந்தனர்.

அந்த வகையில் வடக்கில் இருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும் எனக் கோரும் நான், இராணுவத்தின் பாதுகாப்பை ஒருபோதும் பெறமாட்டேன் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் திட்ட வட்டமாக கூறியிருந்தார்.

எனினும், வடக்கில் பாதுகாப்பை ஏற்படுத்துவதற்காக குவிக்கப்படும் இராணுவத்தினரால் வடக்கைச் சேர்ந்த மக்கள் பெரும் குழப்பமடைந்துள்ளதுடன், அச்சம் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

Comments

comments

Related posts