இளஞ்செழியன் மீதான கொலை முயற்சி நபர் – LTTE இன் முகாமில் சமையல் வேலை செய்தவர்

கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவம் நாடு பூராகவும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தது.

யாழ் மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அந்த அனர்த்தத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் இந்தத் தாக்குதலை புனர்வாழ்வு பெறாத விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த போராளி ஒருவர் நடத்தியிருந்தார் என பொலிஸார் தெரிவித்திருந்தனர். இதனை அனைத்து ஊடகங்களும் முன்னிலைப் படுத்திய செய்திகள் வெளியிட்டிருந்தன.

எனினும் தாக்குதல் சம்பவத்தை நடத்தியவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரை முன்னாள் போராளி என குறிப்பிடுவது தவறான விடயம் என சந்தேகநபரின் மனைவி தெரிவித்துள்ளார்.

39 வயதான சிவராசா ஜெயந்தன் என்பவர், நீதிபதி இளஞ்செழியன் மீதான தாக்குதலை மேற்கொண்டதாக நேற்று பொலிஸில் சரணடைந்தார்.

சிவராசா ஜெயந்தன் 1995 ஆம் ஆண்டிலிருந்து 1998ஆம் ஆண்டு கால பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பின் சைபர் பிரிவு படையணியில் இணைந்திருந்தார்.

1998ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகுவதற்கான கடிதம் கொடுத்துள்ளார்.

அமைப்பிலிருந்து இடையில் விலகுவதன் காரணமாக விடுதலைப் புலிகள் தண்டனை கொடுத்துள்ளனர். அதன் பிரகாரம் விடுதலை புலிகளின் இரணைமடு முகாமில் சமையல் வேலை செய்யும் தண்டனை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் அவருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது நடைமுறை.

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகிய பின்னர், 2000ஆம் ஆண்டு கால பகுதியில் முழங்காவில் பகுதியில் வசித்துள்ளார்.

முழங்காவிலில், யாழ்ப்பாணம் மண்கும்பானைச் சேர்ந்த பெண்ணை திருமணம் முடித்துள்ளார். இவருக்கு 4 பிள்ளைகள் உள்ளனர்.

அதன் பின்னர் 2002ஆம் ஆண்டு மண்கும்பானில் சந்தேகநபர் குடும்பத்துடன் குடியேறியுள்ளார். ஆரம்பத்தில் கூலி வேலைகள் செய்துள்ளார். பின்னர் ஐஸ் பழ வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது வேலணையில் மற்றொரு திருமணம் செய்துள்ளார். இவருக்கும் 4 பிள்ளைகள் பிறந்துள்ளனர். தற்போது குறித்த நபர் வேலணை 4ஆம் வட்டாரத்தில் தொடர்ந்து வசித்து வருகின்றார்.

யாழ்ப்பாணம் – குறிகாட்டுவான் பேருந்துச் சேவையில் சாரதியாக பணியாற்றி வருகின்றார் எனவும் பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை சந்தேகநபரான சிவராசா ஜெயந்தனை எதிர்வரும் எட்டாம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments

Related posts