நீதிபதி இளஞ்செழியனிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்!

துணிச்சல் மிகு நீதிபதி என்னும் பெயரை சம்பாதித்துக் கொண்டவர் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன்.

செம்மணிப் படுகொலை வழக்கு அவரின் துணிச்சலான செயற்பாட்டை புடம்போட்டுக் காட்டியிருந்தது.

வடக்கில் வன்முறைச் சம்பவங்களும், அடிதடிகளும் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்க, அவற்றை தன்னுடைய அதிரடி தீர்ப்புக்களாலும், உத்தரவுகளாலும் தடுத்து நிறுத்தவும், மக்களின் நம்பிக்கைக்கும் வழி வகுத்திருந்தார்.

இன்று அவரை இலக்கு வைப்பதற்கும் அவை தான் காரணமாக இருக்கின்றன.

செம்மணியில் யாரால் படுகொலை நடத்தப்பட்டதோ அவர்களைக் கொண்டே அதனை தோண்டுவதற்கும் நடவடிக்கை எடுத்த போது தமிழ் மக்களின் மனங்களில் அவர் நம்பிக்கையை விதைத்திருந்தார்.

அன்றே எதிரிகள் அவரை இலக்கு வைக்கத் தொடங்கி விட்டனர்.

ஒரு வகையில் சொன்னால், நம்பிக்கை ஒளிக்கீற்றாக தமிழினத்திற்கு தென்பட்டார் என்றால் மிகையாகாது.

அப்படிப்பட்ட ஒரு நீதிபதியை இன்று தென்னிலங்கையும் மெச்சி உச்சி குளிர்கின்றதெனில், அவரிடம் ஏதோவொன்று இருக்கின்றது என்பதை நாம் உணர்ந்தாக வேண்டும்.

மேல்.நீதிமன்ற நீதிபதியாக மாத்திரமல்ல, அவர் நல்ல மனிதராக, தமிழனாக, மனிதாபிமானம் மிக்கவராக, நேர்மையானவராக இருந்திருக்கிறார்.

இவை யாவற்றுக்கும் மேலாக அவரின் துணிச்சல் தான் இன்று அவரை அனைவரும் வியந்து பார்க்குமளவிற்கு மாற்றியிருக்கிறது.

கடந்த சனிக்கிழமை அவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அன்றைய தினம் அவரின் மெய்ப்பாதுகாவலர் தன் கடமையைத் தான் செய்திருக்கிறார்.

தனக்கு கொடுக்கப்பட்ட கடமை, நீதிபதியின் உயிரைக் காப்பாற்றுவது, அதனை என் உயிர் இருக்கும் வரை செய்வேன் என்பதை நிச்சையம் அந்த சார்ஜன்ட் உறுதி மொழி எடுத்திருப்பார். அதனை செயலில் காட்டி விண்ணுலகம் சென்றும் விட்டார். கடமையை காத்தார்.

ஆனால், தன்னுடைய பாதுகாவலின் மீதான நீதிபதியின் உருக்கம், மனிதாபிமானம், அன்பு என்பது எப்படிப்பட்டது என்பதை இளஞ்செழியன் அவர்களின் கண்ணீர் துளிகள் சாட்சியாகி நிற்கின்றன.

கடந்த சனிக்கிழமை மாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இரண்டு பாதுகாவலர்களையும் தனது காரில் போட்டுக் கொண்டு, பதற்றமான நிலையிலும் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார் அவர்.

நிதானமான செயற்பாட்டின் அவரின் இந்த செயல்களை இன்றைய இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். பதற்றம் என்பது பொதுவானது தான், ஆனால் அந்தப் பதற்றம் மற்றவர்களின் உயிர் போகும் வரை இருக்கக் கூடாது.

இன்று தென்னிலங்கை ஏன் அவரை நினைத்து பெருமைப்படுகிறது? சிங்கள ஊடகங்கள் எதற்காக இளஞ்செழியன் என்னும் தமிழ் நீதிபதியை உச்சத்தில் வைத்து எழுதுகின்றன?

அதற்கான பதில், தான் அவரின் கண்ணீரும், காலில் மண்டியிட்டு உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் குடும்பத்தினரிடம் அவர் உருகிய தருணமும்.

இதை வேறு எவரும் செய்திருக்க மாட்டார்கள். ஆனால், நீதிபதி இளஞ்செழியன் தன்னுடைய பதவி நிலை, அதிகாரம், அந்தஸ்து என்று எதனையும் அந்த நொடிப் பொழுதில் அவர் கருத்தில் கொண்டிருக்கவில்லை.

சாதாரண ஒரு மனிதனாக, என்னைப் பாதுகாக்க வந்த மெய்ப்பாதுகாவலனாகிய உங்கள் குடும்பத்தின் பாதுகாவலனை இழந்து நிற்கிறீர்களே. என்ன செய்வேன். பலருக்கு தீர்ப்பளித்த நான், உங்கள் குடும்பத்தின் தலைவனை திருப்பித் தரமுடியவில்லையே என்னும் அவரின் ஏக்கமும், கூடவே 18 ஆண்டுகள் அன்பாய் இருந்தவரை பறிகொடுத்த துன்பமும் அவரை நிச்சயம் வாட்டியிருக்கும்.

இதை இன்றைய தலைமுறையினர் கற்றுக் கொள்ள வேண்டும். இதனால் தான் தென்னிலங்கை சமூகமும் அவரை நினைத்து கொண்டாடி வருகிறது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

இதுவொருபுறமிருக்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் அவர்களுக்கும் இதேபோன்றே தென்னிலங்கையில் பெரும் வரவேற்பு இருந்தது.

தென்னிலங்கை மக்களிடத்தே அவர் கொண்டிருந்த நெருக்கமும், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தென்னிலங்கைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அவர் நினைத்ததும் அவருக்கு தென்னிலங்கையில் ஒருவகை மரியாதை இருந்தது.

இன்று அதே மரியாதை அடுத்து கிடைக்கின்றதெனில், அது யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அவர்களுக்கு தான். தென்னிலங்கையும் இன்று கொண்டாடும் மனிதராக, போற்றும் ஒருவராக இருக்கிறார்.

இனம், மதம், மொழி கடந்து அவரை நேசிக்கிறார்கள். இந்த நேசிப்பானது அனைத்து இனத்தவர்களிடத்திலும் வரவேண்டும். அதேபோன்று, இளஞ்செழியன் அவர்களிடத்தில் இருந்து நாம் நிறைய விடயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

அது துணிச்சலாக இருந்தாலும் சரி, மனிதாபிமானச் செயலாகவிருந்தாலும், அல்லது அளவு கடந்த அன்பாகவும், கடமையாகவும் எல்லாவற்றையும் அவரிடத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

Comments

comments

Related posts