கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கான ஜூலை மாத ஜோதிடப் பலன்கள்

கேள்விக் கணைத் தொடுப்பதில் வல்லவர்களே! ராசிநாதன் புதன் இந்த மாதம் முழுக்க சாதகமாக இருப்பதால் எதிலும் உங்கள் கை ஓங்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். குழம்பிக் கொண்டிருந்த நீங்கள், தெள்ளத் தெளிவாக முடிவுகள் எடுப்பீர்கள்.

மதிப்பு, மரியாதைக் கூடும். நண்பர்கள், உறவினர்கள் வீட்டு திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் இவற்றையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். சூரியன் சாதகமாக இருப்பதால் தந்தையாரின் உடல் நிலை சீராகும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு.

அரசுப் பணியை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு வேலைக் கிடைக்கும். அரசாங்கத்தால் சில சலுகைகளும் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். உங்களின் நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் பூர்வீகச் சொத்தில் இருந்த பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்கும். வழக்கில் ஜாமீன் கிடைக்கும். புது சொத்து வாங்குவீர்கள். குழந்தை பாக்யம் உண்டு. பிள்ளைகளை போராடி அவர்கள் ஆசைப்பட்ட நிறுவனத்தில் சேர்ப்பீர்கள்.

வருங்காலத்தை மனதில் கொண்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை உணருவார்கள். ஆனால் ஜன்ம குரு தொடர்வதால் உங்கள் மீது சிலர் சேற்றை வாரி பூச முயற்சிப்பார்கள். உங்கள் வாயை சீண்டிப் பார்ப்பார்கள். அநாவசியப் பேச்சையும், முன்கோபத்தையும் தவிர்க்கப் பாருங்கள். குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் சண்டை சச்சரவுகளும், வீண் சந்தேகங்களால் பிரிவும் வரக்கூடும். விட்டுக் கொடுத்துப் போங்கள்.

தலைச் சுற்றல், நெஞ்சு வலி, தூக்கமின்மை, ஒருவித படபடப்பு வந்துப் போகும். கை, கால் அசதி அதிகமாகும். 3-ல் சனி வலுவாக அமர்ந்திருப்பதால் மனோ பலம் அதிகரிக்கும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள்.

அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். பழைய கடன் பிரச்னைகள் தீரும். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் மனைவிவழியில் உதவிகள் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு.

கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தை தள்ளி வையுங்கள். பெற்றோருக்கு தெரியாமல் பெரிய விஷயங்களில் ஈடுபட வேண்டாம். போராடி உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள்.

Comments

comments

Related posts