பெற்றோர் பரிசளித்த கே.டி.எம் டியூக் 390 பைக்கில் ஸ்டண்ட் செய்து உயிரிழந்த 15 வயது சிறுவன்

புதியதாக வாங்கிய கே.டி.எம் பைக்கில் ஸ்டண்ட் செய்ய முயன்று அது தவறாக சென்றதால் விபத்து ஏற்பட்டு பதினைந்து வயது சிறுவன் ஒருவன் பலி ஆனான்.

டெல்லியில் வசித்து வந்த மொஹமத் உமர் ஷேக் என்ற 15 வயது பள்ளிச் சிறுவனுக்கு, பெற்றோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கே.டி.எம் டியூக் 390 மாடல் பைக்கை வாங்கி தந்தனர்.

அந்த சிறுவன் தன் வீட்டின் அருகில் வசிக்கும் மொஹமத் அனாஸ் என்ற இளைஞருடன்புதியதாக வாங்கிய கே.டிம்.எம் பைக்கில் சம்பவம் நடந்த நாளன்று ஸ்டண்ட்டில் ஈடுபட்டுள்ளான்.

சிறுவன் மொஹமத் உமர் பைக்கை ஓட்ட, பில்லியனில் மொஹமத் அனாஸ் அமர்ந்திருந்தார். அப்போது நடைபெற்ற விபத்தால் சம்பவ இடத்திலேயே சிறுவன் மொஹமத் உமர் ஷேக் பலி ஆனான்

இந்த விபத்தை நேரில் பார்த்தவர் கூறும்போது, அவர்கள் இருவரும் கே.டி.எம். டியூக் 390 பைக்கில் ஸ்டண்ட் செய்து வந்ததாக கூறியுள்ளார். திடீரென தரையில் விழுந்த பைக் உருகுலையும் நிலைக்கு சென்றதாக கூறினார். இதனால் பைக்கில் அமர்ந்திருந்த இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த விபத்தால் சிறுவன் மொஹமத் உமர் ஷேக் சம்பவ இடத்திலேயே உயிரழக்க பில்லியனில் அமர்ந்திருந்த இளைஞர் மொஹமத் அனாஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி, சாஸ்திரி பூங்கா அருகே நடைபெற்ற இந்த விபத்தை குறித்து அப்பகுதி காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளனர். வழக்கில், மொஹமத் உமர் ஷேக் அதிவேகத்தில் பைக் இயக்கியதால் கட்டுபாடு இழந்து விபத்து ஏற்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

8ம் வகுப்பு படிக்கும் மாணவனான மொஹமத் உமர் ஷேக் தனது பெற்றோரிடம் கே.டி.எம். டியூக் 390 மாடல் பைக்கை வாங்கி தர தினமும் கேட்டுக்கொண்டு வந்துள்ளான்.

பெற்றோர்கள் முடியாது என்று மறுத்தும், மொஹமத் உமரின் தொந்தரவு தாங்க முடியாததால், இறுதியாக சமீபத்தில் மகன் கேட்ட கே.டி.எம் டியூக் 390 மாடல் பைக்கை வாங்கி அவனுக்கு பரிசளித்துள்ளனர்.

பைக் ஓட்டுவதில் சிறப்பாக பயிற்சி பெற்றவர்களே ஸ்டண்ட் செய்யும் போது கவனத்துடன் இருப்பார்கள். அதற்கு பைக்கை கட்டுபாட்டில் வைத்திருக்கும் திறன் வேண்டும்.

அந்த திறன் பைக்கை நாம் தொடர்ந்து இயக்கும் அனுபவத்தின் மூலம் தான் அடைய முடியும். அந்த அனுபவம் கிடைக்கும் வரை நமக்கு பொறுமையும் தீவிர முயற்சியும் வேண்டும்.

அதனால் தான் அரசு 18 வயது நிரம்பிய பின் ஓட்டுநர் உரிமத்தை வழங்கும் சட்டத்தை இயற்றி அதை நடைமுறைப்படுத்தி உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த பைக் போன்ற பொருளை, அதற்கான புரிதல் இல்லாத வயதில் கிடைத்தால் இதுபோன்ற சோகம் தான் நடக்கும்.

18 வயதில் ஓட்டுநர் உரிமம் கிடைத்து விட்டால், நீங்கள் வாகனங்களை எப்படி வேண்டுமானாலும் ஓட்டலாம் என்று அர்த்தமாகாது. பைக்கில் ஸ்டண்ட் போன்ற சாகசங்களை செய்ய அதற்கு முறையான பயிற்சி வேண்டும். அதற்கான திறனை வளர்க்க பல ஆண்டுகள் ஆகும்.

பிள்ளைகள் கேட்கிறார்கள் என பெற்றோர்கள் பைக் போன்ற பொருளை வாங்கி தருவது சிறந்த வழிகாட்டி தனம் அல்ல. பைக் போன்ற ஒரு சாதனத்தை புரிந்துக்கொண்டு, உங்கள் பிள்ளைகள் இயக்க அவர்களுக்கு திறன் உள்ளதா என்பதை பெற்றோர்கள் ஆராய வேண்டும்.

சிறந்த பெற்றோராக இருக்கவேண்டும் என்று உங்கள் குழந்தைகளின் உயிரை பணையம் வைக்கும் காரியங்களை என்றும் செய்யாதீர்கள்.

நட்பு, பாசம், காதல் ஆகியவற்றை யாரு வேண்டுமானாலும் உங்கள் குழந்தைகளிடத்தில் காட்டலாம். ஆனால் பெற்றோர் என்பவர்கள் மேல் கூறிய உணர்வுகளுடன் கண்டிப்பையும் சிறுது அதிகமாக பிள்ளைகள் மீது வைக்கத்தான் வேண்டும்.

Comments

comments

Related posts