அத்தே ஞானசார தேரர் முன்பிணையில் விடுதலை

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றில் சரணடைந்த பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் முன்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஞானசார தேரர் இன்று முற்பகல் கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றில் தமது சட்டத்தரணிகள் ஊடாக சரணடைந்தார்.

இந்த நிலையில், அவர் முன்பிணையில் செல்வதற்கான அனுமதியை கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன வழங்கியுள்ளார்.

அத்துடன், அவருக்கு எதிராக கடந்த 15 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையை மீளப் பெற்றுக்கொள்ளவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

முஸ்லிம்களின் புனித நூலான திருக்குரானை அவமதித்தமை மற்றும் ஜாதிக பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வடரெக விஜித தேரர் கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பில் பலாத்காரமாக உள்நுழைந்து அச்சுறுத்தியமை தொடர்பாக ஞானாசார தேரருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, ஞானசார தேரர், ஹோமாக நீதிமன்றத்தின் வழக்கு விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நீதிமன்ற வளாகத்தில் செயற்பட்டமை தொடர்பாக நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணைகளில் நீதிமன்றில் முன்னிலையாகாதமை காரணமாக ஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்குமாறு சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரியிருந்தார்.

இது தொடர்பான வழக்கின் மறுவிசாரணைகள், மேன்முறையீட்டு நீதிமன்றில் நாளையதினம் இடம்பெறவுள்ளது.

Comments

comments

Related posts