விருச்சிகம் – ஆனி மாத ராசி பலன்கள் (15.6.2017 முதல் 16.7.2017 வரை)

நினைத்ததை செய்து முடிக்கும் விருச்சிக ராசி அன்பர்களே!

உங்களின் ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் சூரியனோடும், புதனோடும் இணைந்து சஞ்சரிக்கிறார். ராசிநாதனாகவும், 6-க்கு அதிபதியாகவும் விளங்கும் செவ்வாய் 8-ம் இடத்தில் வலிமையிழந்து சஞ்சரிக்கும் பொழுது ராஜயோக அமைப்பு உருவாகிறது. எனவே தொட்ட காரியங்கள் வெற்றியாகும். தொகை வரவு திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கியத் தொல்லை அகலும்.

புத ஆதித்ய யோகம் இருப்பதால் பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அதிகப் பிரயாசை எடுக்காமலேயே அனைத்துக் காரியங்களும் வெற்றியாக முடியும். அரசியல் செல்வாக்கு மேலோங்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். கல்வி மற்றும் கலைத்துறை சம்பந்தமாக நீங்கள் எடுத்த முயற்சி கைகூடும்.

தன பஞ்சமாதிபதியாக விளங்கும் குரு பகவான், லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவைகள் திடீர் என வந்து சேர்ந்து திக்குமுக்காட வைக்கும்.

வெற்றிப் படிக்கட்டின் விளிம்பில் ஏற வேண்டுமானால், வியாழ பகவானின் அருட்பார்வை வேண்டும். அந்த அருட்பார்வை, உங்கள் ராசியைப் பொறுத்தவரை 3,5,7 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே முன்னேற்றத்தில் இருந்த முட்டுக்கட்டைகள் அகலும். முக்கியப் புள்ளிகள் உங்கள் இல்லம் தேடிவந்து உதவிக்கரம் நீட்டுவர். தங்கம், வெள்ளி தானாக வந்து சேரும். விற்பனையான சொத்துகளுக்குப் பதிலாக மீண்டும் புதிய சொத்துகளை வாங்குவீர்கள். வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக் கொள்ளலாமா? என்று சிந்திப்பீர்கள். புண்ணிய காரியங்களுக்கு பொருளுதவி செய்வீர்கள்.

ஜென்மச் சனியின் ஆதிக்கம் நடைபெற்றாலும், ஏழரைச் சனி இனி நற்பலன்களைக் கொடுக்கத் தொடங்கும். சனி வக்ரம் பெற்றுச் சஞ்சரிப்பதால் சஞ்சலங்கள் தீரும். சந்தோஷம் சேரும். சனிக் கிழமை தோறும் சனீஸ்வர பகவானை, சனி கவசம் பாடி வழிபாடு செய்யுங்கள். கற்பக விநாயகர் வழிபாடும் ஆனந்தமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். ஆனித் திருமஞ்சனத்தன்று நடராஜர் தரிசனம் பார்த்தால் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும்.

ரிஷப சுக்ரன் சஞ்சாரம்

ஜூன் 29-ந் தேதி ரிஷப ராசிக்குச் சுக்ரன் செல்கிறார். சப்தம ஸ்தானத்தில் சுக்ரன் சஞ்சரிப்பது மிகுந்த யோகமாகும். 7-ல் சஞ்சரிக்கும் சுக்ரன், உங்கள் ராசியைப் பலமாக பார்க்கிறார். நவக்கிரகத்தில் கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக் கொடுக்கும் ஆற்றல் பெற்றவர் சுக்ரன். எனவே நீங்கள் சொல்லும் சொற்கள் எல்லாம் வெல்லும் சொற்களாக மாறும். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. புதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கடக புதன் சஞ்சாரம்

ஜூலை 1-ந் தேதி கடக ராசிக்குப் புதன் செல் கிறார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 8,11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். லாபாதிபதியாக விளங்கும் புதன் 9-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது, ஒளிமயமான எதிர்காலத்திற்கு உத்தரவாதம் கிடைக்கும். கூட்டாளிகளால் நன்மை உண்டு. மாமன், மைத்துனர்கள் உங்கள் சேமிப்பு உயர வழிவகுத்துக் கொடுப்பர். பூமி வாங்கும் யோகம் முதல் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் யோகம் வரை படிப்படியாக வந்து சேரும் நேரம் இது. சர்ப்பக் கிரகங்களின் ஆதிக்கமும் உங்களுக்கு நற்பலன்களைத் தரும் விதத்திலேயே இருக்கிறது. 4-ல் கேது, 10-ல் ராகு இருப்பதால் நாகசாந்திப் பரிகாரங்களைச் செய்து கொள்வதன் மூலம் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும்.

கடகச் செவ்வாய் சஞ்சாரம்

ஜூலை 12-ந் தேதி கடக ராசிக்குச் செவ்வாய் செல்கிறார். அங்கு அவர் நீச்சம் பெறுகிறார். எனவே ஆரோக்கியத் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துங்கள். அலைச்சல்களை அளவோடு வைத்துக் கொள்ளுங்கள். 6-க்கு அதிபதியாகவும் செவ்வாய் இருப்பதால், அது நீச்சம்பெறுவது ஒருவழிக்கு நன்மையை வழங்கும். வீட்டுப் பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். சகோதர ஒற்றுமை பலப்படும். அங்காரக வழிபாடு அதிக நன்மையை வழங்கும்.

பெண்களுக்கு!

முன்னேற்றங்கள் அதிகரிக்கும் மாதம் இது. மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். உடன்பிறப்புகள் உங்களுக்கு உதவிக்கரமாக இருப்பார்கள். தாய்வழியில் தனவரவு உண்டு. கணவன்- மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். உத்தியோக உயர்வு, சம்பள உயர்வு போன்றவை பற்றிய சந்தோஷத் தகவல் வந்து சேரும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். வாகன யோகம் உண்டு. குழந்தைகளின் கனவுகளை நனவாக்குவீர்கள். சக ஊழியர் களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஜென்மச் சனிக்குப் பரிகாரமாக சனிக்கிழமை தோறும் சனிபகவான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். பிரதோஷம் அன்று நந்தீஸ்வரரையும், உமா மகேஸ்வரரையும் வழிபட்டு நலங்களை வரவழைத்துக் கொள்ளுங்கள்.

Comments

comments

Related posts