மீனம் – ஆனி மாத ராசி பலன்கள் (15.6.2017 முதல் 16.7.2017 வரை)

வீட்டிற்கு வரும் விருந்தினர்களை விதவிதமாக உபசரிக்கும் மீன ராசி அன்பர்களே!

உங்களின் ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் குருவின் பரிபூரண பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. 6-ல் ராகு நிற்க, குரு கேந்திரத்தில் இருந்தால் அஷ்டலட்சுமி யோகம் செயல்படும் என்பார்கள். அந்த அடிப்படையில் இந்த மாதத்தின் கிரக நிலைகள் இருக்கின்றன. எனவே, பணப்புழக்கம் நன்றாக இருக்கும். தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். கருத்து மோதல்கள் அகலும். கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்து பாராட்டுப் பெறுவீர்கள்.

வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். அஷ்டலட்சுமி யோகம் செயல்படும் பொழுது எட்டு வகை லட்சுமியின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும் அல்லவா?. எனவே தைரியத்தோடு சில முக்கிய முடிவெடுப்பீர்கள். தொழில் வளர்ச்சியில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகள் அனைத்தும் நடைபெறும். பிள்ளைகளின் கல்யாண வாய்ப்புகள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

எப்பொழுது திருமணம் முடியும் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு, இந்த மாதம் மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும். 2-ல் சுக்ரன் இருப்பது ஒருவழிக்கு நன்மைதான். கவர்ச்சியாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். வீட்டுக் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதில் இருந்த தடைகள் அகலும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

சுக ஸ்தானத்தில் சூரியன், புதன், செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் சஞ்சரிக்கின்றன. எனவே அச்சுறுத்தும் நோய் உங்களை விட்டு அகலும். உறவினர் பகை அகல, புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள். அரசியல் அனுகூலம் உண்டு. லாபாதிபதியாகவும், விரயாதிபதியாகவும் விளங்கும் சனிபகவான் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். எனவே வெளிநாட்டு முயற்சியில் கொஞ்சம் தாமதம் ஏற்படலாம். வீடு மாற்றங்கள், இடமாற்றங்கள், ஊர் மாற்றங்கள் விரும்பும் விதத்தில் அமையும்.

உத்தியோகம் சம்பந்தமாக வெளிநாட்டிற்குச் சொந்தச் செலவில் செல்ல நினைப்பவர்கள், கொஞ்சம் யோசித்துச் செயல் படுவது நல்லது. வெளிநாட்டில் வேலை கிடைக்குமா? என்பது சந்தேகம் தான். இம்மாதம் பார்க்கும் குருவைப் பலப்படுத்துவதோடு, குருவிற்குரிய சிறப்பு தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருவதும் நல்லது.

ரிஷப சுக்ரன் சஞ்சாரம்

ஜூன் 29-ந் தேதி ரிஷப ராசிக்குச் சுக்ரன் செல்கிறார். சகாய ஸ்தானாதிபதி சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு இலாகா மாற்றங்கள் வந்து சேரலாம். வழக்குகள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் ஒருசிலருக்கு நீண்ட தூரத்திற்கான மாறுதல்கள் கிடைக்கலாம். உடன்பிறப்புகளில் ஒருசிலர் உங்களை விட்டு விலக நேரிடலாம். பணியாளர் தொல்லை அதிகரிக்கும்.

கடக புதன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 4,7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன், அவர் 5-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். பிள்ளைகளின் மேற்படிப்பு சம்பந்தமாக கடல் தாண்டிச் சென்று படிக்க வேண்டு மென்று விரும்பினால், அதற்காக எடுத்த முயற் சிகள் கைகூடும். வாழ்க்கைத் துணை வழியே ஏற்பட்ட பிணக்குகள் அகலும். பூர்வீகச் சொத்துகளில் ஒரு பகுதியை விற்று விட்டு, புதிய சொத்துகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கடக செவ்வாய் சஞ்சாரம்

ஜூலை 12-ந் தேதி கடக ராசிக்குச் செவ்வாய் செல்கிறார். அந்த வீடு அவருக்கு நீச்ச வீடாகும். உங்கள் ராசிக்கு 2,9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. பணப்பற்றாக்குறை ஏற்படலாம். பக்கபலமாக இருக்கும் நண்பர்களுக்குள் பகை ஏற்படக்கூடும். குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாமல் போகலாம். தைரியமும், தன்னம்பிக்கையையும் தக்க வைத்துக் கொள்ளுங்கள். ஆனித் திருமஞ்சனத்தன்று நடராஜர் தரிசனம் பார்ப்பதன் மூலம் நலம் யாவும் வந்து சேரும்.

பெண்களுக்கு!

இந்த மாதம் குரு பார்வையால் குழப்பங்கள் அகலும். குதூகலம் கூடும். இழப்புகளை ஈடுசெய்ய இனிய வாய்ப்புகள் வந்து சேரும். குடும்ப ஒற்றுமை பலப் படும். கணவன்-மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். மழலைச் செல்வத்திற்காக காத்திருப்பவர்களுக்கு புத்திரப்பேறு கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றும். உடன்பிறப்புகளில் ஒரு சிலர் உங்களுக்கு எதிரியாகலாம். பெற்றோர் வழியில் ஆதரவு திருப்தி தரும். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்தபடியே பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கலாம். தங்கம், வெள்ளி வாங்குவதில் தனிக்கவனம் செலுத்துவீர்கள். மங்கள நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறும் வாய்ப்பு உண்டு. ஆனைமுகன் வழிபாடு ஆனந்தம் வழங்கும்.

Comments

comments

Related posts