துலாம் – ஆனி மாத ராசி பலன்கள் (15.6.2017 முதல் 16.7.2017 வரை)

தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெறிய சொல்லும் துலாம் ராசி அன்பர்களே!

உங்களின் ஆனி மாதக் கிரகநிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். சனி 2-ம் இடத்தில் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். குரு விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து 6-ம் இடத்தைப் பார்க்கிறார். பொதுவாகவே இம்மாதம் பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும் என்றே சொல்லலாம். சுக்ர பலம் கூடுதலாக இருக்கும் பொழுது, வசதி பெருகும். வாய்ப்புகள் வாசல் கதவைத் தட்டும்.

வேலை கிடைக்கவில்லையே என்று வேதனைப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு அமையும். மாலை கிடைக்கவில்லையே என்று ஏங்கியவர்களுக்கு மாலை சூடும் வாய்ப்பு கிட்டும். பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்கவில்லையே என்று அங்கலாய்த்தவர்களுக்கு இப்பொழுது தகுந்த பலன் கிடைக்கப் போகிறது. கொடுக்கல்-வாங்கல்களில் ஆதாயம் உண்டு. பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.

ஏழரைச் சனியில் எத்தனையாவது சுற்று உங்களுக்கு நடைபெறுகிறது என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள். முதல்சுற்று நடைபெற்றால் முன்னேற்றப் பாதையில் சில குறுக்கீடுகள் வந்து சேரும். இரண்டாவது சுற்று நடைபெற்றால் இனிய பலன்கள் ஏராளமாக நடைபெறும். அதை ‘பொங்கு சனி’ என்று அழைப்பார்கள். மூன்றாவது சுற்று, நான்காவது சுற்று நடைபெறுபவர்கள் ஆரோக்கியத் தொல்லையால் அவதிப்பட நேரிடலாம். என்ன இருந்தாலும் சனி உங்களுக்கு ஓரளவு நன்மையைச் செய்பவராகத்தான் இருக்கிறார். எனவே கூடியவரை நல்ல பலன்களையே அவர் வழங்குவார்.

இருப்பினும் மந்தன் எனப்படும் சனி, மந்த கதியில் இயங்குபவர். காரியங் களில் தாமதம் ஏற்பட்டாலும் கடைசி நேரத்தில் கைகூடிவிடும். சனிக்குரிய கவசத்தைப் பாடி, சனிபகவானுக்கு எள்தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது. சனி பகவானுக்குரிய சிறப்பு ஸ்தலங்களுக்குச் சனிக் கிழமை அல்லது புதன்கிழமை சென்று, கரு நீல வண்ணத்தில் வஸ்திரம் அணிவித்து, சுகந்த வாசமுள்ள மலர் மாலையைச் சூட்டி வழிபடுவதன் மூலம் பிரச்சினைகள் நீங்கும்.

இம்மாதம் ஆனித் திருமஞ்சனம் வருகிறது. அன்றைய தினம் நடராஜர் சன்னிதியில் சிவபுராணம் பாடி வழிபடுவதன் மூலம் நன்மைகளை அதிகம் பெறலாம். மாதத்தின் மையப் பகுதியில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்குவீர்கள்.

ரிஷப சுக்ரன் சஞ்சாரம்

ஜூன் 29-ந் தேதி ரிஷப ராசிக்குச் சுக்ரன் செல்கிறார். ராசிநாதன் மறைவது அவ்வளவு நல்லதல்ல. குடும்பத்தில் நிம்மதி குறையும். கருத்து மோதல்கள் அதிகரிக்கும். எந்தச் செயலையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. மற்றவர்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு செயல்படுங்கள். அரசு வழியில் தொல்லைகளும், அரசாங்கத்தால் சிக்கல்களும் உருவாகலாம். வெளிநாட்டு வேலையில் இருப்பவர்கள் திடீர் என மாற்றப்படுவர். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் தான் பூர்த்தியாகும். பெண்வழிப் பிரச்சினைகள் தலைதூக்கும்.

கடக புதன் சஞ்சாரம்

ஜூலை முதல் கடக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்குப் பத்தாமிடத்திற்கு பயனிக்கும் புதன், முத்தான பலன்களை வழங்கப் போகிறார். மாமன் வழி உறவால் மகிழ்ச்சி ஏற்படும். மன இறுக்கம் அகலும். எதிர்காலம் பற்றிய பயம் மாறும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வில் வெளிவந்து, புதிய தொழில் தொடங்கும் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வர். மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு கூடுதலாகக் கிடைக்கும்.

கடக செவ்வாய் சஞ்சாரம்

ஜூலை 12-ந் தேதி கடக ராசிக்குச் செவ்வாய் செல்கிறார். தன சப்தமாதிபதியான செவ்வாய், அங்கு நீச்சம் பெறுகிறார். எனவே பணப்புழக்கத்தில் தடை ஏற்படும். பற்றாக்குறை அதிகரிக்கும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். சங்கிலித் தொடர்போல கடன்சுமை தொடர்ந்து கொண்டிருக்கிறதே என்று கவலைப்படுவீர்கள். உங்களுக்குரிய பங்கை பிரித்துக்கொடுக்காமல், சகோதரர்கள் கவலை அடையவைப்பர். போராடி வெற்றி பெறும் நேரமிது.

பெண்களுக்கு!

மாதத் தொடக்கம் முதல் ஜூலை 11-ந் தேதி வரை, உங்களுக்கு நல்ல பலன்களே வந்து சேரும். இல்லம் தேடி இனிய செய்திகள் வரத்தொடங்கும். தாய்வழி ஆதரவு பெருகும். சகோதர வர்க்கத்தினர் உங்களுக்கு உதவிக்கரமாக இருப்பர். வீண்பழிகளில் இருந்து விடுபடுவீர்கள். கணவன்-மனைவிக்குள் பாசமும், நேசமும் அதிகரிக்கும். பிள்ளைகளுக்கான சுபகாரியங்களைச் செய்து முடிக்க வேண்டுமென்ற ஆசை மேலோங்கும். பிள்ளைகளின் மேற்படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடன்பிறப்புகள் உங்களை விட்டு விலகலாம். சொத்துப் பிரச்சினைகள் உருவாகலாம். வராகி வழிபாடு வளர்ச்சியைக் கூட்டும்.

Comments

comments

Related posts