தனுசு – ஆனி மாத ராசி பலன்கள் (15.6.2017 முதல் 16.7.2017 வரை)வ்

பெருந்தன்மை குணம் கொண்ட தனுசு ராசி அன்பர்களே!

உங்களின் ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குருபகவான் பத்தாமிடத்தில் சஞ்சரிக்கிறார். 10-ல் குரு வரும்பொழுது பதவியில் மாற்றம் வரும் என்பார்கள். அந்த அடிப்படையில் தெசாபுத்தி பலம் பெற்றிருந்தால் உயர் பதவிகள் கிடைக்கலாம். தெசாபுத்தி பலமிழந்திருந்தால் பதவி இறக்கம் ஏற்படலாம். அதே நேரத்தில் உங்கள் ராசி அடிப்படையில் ஏழரைச் சனியின் ஆதிக்கம் நடைபெறுகிறது.

தனுசு ராசிக்குச் சனிபகவான் நன்மை செய்பவர்தான் என்றாலும், விரயச் சனியின் ஆதிக்கத்தில் அல்லவா இப்பொழுது இருக்கிறார். எனவே பணம் எவ்வளவு வந்தாலும் கையில் தங்காது. அதே நேரம் சேமிப்பு கரைகிறதே என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம். தனாதிபதியாகவும், சகாய ஸ்தானாதிபதியாகவும் சனி விளங்குவதால், தேவைக்கேற்ற பணத்தைக் கொடுத்துக் கொண்டே இருப்பார். காரியத்தைத் தொடங்கிவிட்டால் பணம் தானாக வந்து சேரும். கேட்கும் இடத்தில் உதவிகள் கிடைக்கும்.

குருவின் பார்வையும், குடும்ப ஸ்தானத்தில் பதிகிறது. எனவே குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். கடுமையாக முயற்சித்தும் இதுவரை நடைபெறாத காரியங்கள், இனிமேல் நடைபெறும். வீட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சப்தம ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன் ஆகிய மூன்று கிரகங்களும் இருக்கின்றன. சப்தமாதிபதியான புதன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். திருமண முயற்சிகளில் அனுகூலம் கிடைக்கும்.

பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம். மேலிடத்து அனுகூலம் கிடைக்கும். வீண் வம்பு, வழக்குகளில் இருந்து விடுபடுவீர்கள். பிள்ளைகளால் வந்த தொல்லைகள் அகலும். சூரிய – செவ்வாய் சேர்க்கையால் அரசு வழித் தொல்லைகளுக்கு ஆளாக நேரிட்டாலும், குருவின் பார்வை 6-ம் இடத்தில் பதிவதால் அதிலிருந்து விடுபட இயலும். அதே நேரத்தில் சகாய ஸ்தானத்தில் கேதுவும், 9-ம் இடத்தில் ராகுவும் இருப்பதால், ராகு-கேது பிரீதிகளை முறையாகச் செய்துகொள்வது நல்லது. பிரதோஷ காலத்தில் விஸ்வரூப நந்தியை வழிபடுவது பிரச்சினையை தவிர்க்கும்.

இந்த மாதத்தில் ஆனித் திருமஞ்சனம் வருகின்றது. இறைவன் காட்சி கொடுக்கும் திருநாள் இது. உங்கள் மனக்கவலை மாறவும், பணக்கவலை, தீரவும் திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறவும், திருமஞ்சன நாளில் நடராஜப் பெருமானை வழிபட்டு வருவது நல்லது.

ரிஷப சுக்ரன் சஞ்சாரம்

இதுவரை மேஷத்தில் சஞ்சரித்து வந்த சுக்ரன் ஜூன் 29-ந் தேதி ரிஷப ராசிக்குச் செல்கிறார். 6-க்கு அதிபதி 6-ல் சஞ்சரிக்கும் பொழுது, வாங்கல்- கொடுக்கல்களில் கவனம் தேவை. வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடனை வாங்கும் சூழ்நிலை உருவாகலாம். பழைய வியாதிகள் மீண்டும் தலைதூக்கலாம். பய உணர்ச்சி அதிகரிக்கும். எந்தக் காரியத்தையும் துணிந்து செய்ய இயலாது. செய்வோமா, வேண்டாமா என்ற இரட்டித்த சிந்தனை மேலோங்கும். இதுபோன்ற காலங்களில் துணிவும், தன்னம்பிக்கையும் உங்களுக்குத் தேவை. பெரியோர்களின் ஆலோசனைகளையும், அருளாளர்களின் ஆசியும் தான் உங்களுக்கு மனநிம்மதியைக் கொடுக்கும்.

கடக புதன் சஞ்சாரம்

ஜூலை 1-ந் தேதி கடக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 8-ல் புதன் சஞ்சரிப்பது ஒரு வகைக்கு நன்மைதான். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேருவர். வீடுமாற்றச் சிந்தனை மேலோங்கும். புதிய ஒப்பந்தங்கள் ஒவ்வொன்றாக வந்து சேரலாம். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.

கடக செவ்வாய் சஞ்சாரம்

ஜூலை 12-ந் தேதி கடக ராசிக்குச் செவ்வாய் செல்கிறார். கடக ராசி என்பது செவ்வாய்க்கு நீச்ச வீடாகும். உங்கள் ராசிக்கு 5,12-க்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் நீச்சம் பெறுவதால் நன்மையும் உண்டு. தீமையும் உண்டு. பயணங்களால் பலன் கிடைக்கும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. வாங்கிய சொத்துகளில் பிரச்சினைகள் உருவாகும்.

பெண்களுக்கு!

இம்மாதம் பொருளாதார நிலை உயரும் மாதமாகவே கருதலாம். புதிய பாதை புலப் படும். உயர்பதவிகளை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்குஅது கைகூடும். கணவன்- மனைவிக்குள் பாசமும், நேசமும் அதிகரிக்கும். உங்கள் குரலுக்கு குடும்ப உறுப்பினர்கள் செவிசாய்ப்பர். வாங்கல் -கொடுக் கல்கள் ஒழுங்காகும். வாரிசுகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. வாகனப் பழுதுச் செலவுகளால் கவலை ஏற்படும். எனவே பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனங்கள் வாங்குவதில் மும்முரம் காட்டுவீர்கள். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு உங்களுக்குகூடுதலாக இருக்கும். விரயச்சனியின் ஆதிக்கம் நடப்பதால் சுபவிரயங்கள் அதிகரிக்கும். பெருமாள்- லட்சுமி வழிபாடு பெருமைகளைச் சேர்க்கும்.

Comments

comments

Related posts