கும்பம் – ஆனி மாத ராசி பலன்கள் (15.6.2017 முதல் 16.7.2017 வரை)

முன்யோசனையுடன் செயல்படும் கும்ப ராசி அன்பர்களே!

உங்களின் ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே உங்கள் ராசிநாதன் சனிபகவான் தொழில் ஸ்தானத்தில் வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கும், 12-ம் இடத்திற்கும் அதிபதியாக சனி விளங்குவதால், சனியின் வக்ர இயக்கம் பெரியளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாது. தொழிலுக்கு புதிய முதலீடு செய்ய புதிய கூட்டாளிகளைச் சேர்த்துக் கொள்வீர்கள். குருவின் பார்வை 2-ம் இடத்தில் பதிவதால் சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும்.

பணப்பற்றாக்குறை ஏற்பட்டாலும் கடைசி நேரத்தில் காரியங்கள் கைகூடிவிடும். குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். ஒரு சிலருக்கு வீடு, இடம் வாங்கும் யோகம் ஏற்படலாம். வெளியூர் அல்லது வெளி மாநிலங்களுக்குச் சென்று தொழிலை விரிவு செய்யவேண்டும் என்ற விருப்பம் நிறைவேறும்.

ஜென்மத்தில் கேதுவும், 7-ல் ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். மாதத் தொடக்க நாளில் 6-க்கு அதிபதி சந்திரன் கேதுவோடு இணைந்து செயல்படுகிறார். எனவே அலைச்சல் அதிகரிக்கும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளிலும் ஆதாயம் கிடைக்கும். ஆன்மிகப் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். குலதெய்வம் கோவிலுக்கு திருப்பணிகள் செய்வதற்காக உதவிகளை சிலர் செய்வார்கள். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த சம்பளப் பாக்கிகள் வசூலாகும். நேர்முகத் தேர்விற்கு பலமுறை சென்றும் வேலை கிடைக்கவில்லையே என்று வேதனைப்பட்டவர்களுக்கு இப்பொழுது வேலை கிடைக்கும்.

சகாய ஸ்தானத்தில் சுக்ரன் பலம் பெற்று இருப்பதால், பெண்வழிப் பிரச்சினைகள் அகலும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேருவர். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு. பஞ்சம ஸ்தானத்தில் புதன், சூரியன், செவ்வாய் ஆகிய கிரகங்களும் சஞ்சரிக்கின்றன. சப்தமாதிபதி 5-ல் சஞ்சரிப்பதால் வாழ்க்கைத் துணை வழியே ஏற்பட்ட போராட்டங்கள் மாறும். புத- ஆதித்ய யோகம் செயல்படுவதால் கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் அனுகூலத்தோடு ஒரு நல்ல காரியமொன்றைச் செய்து முடிப்பீர்கள். ஆனித் திருமஞ்சனத்தன்று நடராஜர் அபிஷேகமும், பிரதோஷத்தன்று நந்தீஸ்வரர் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். எதிர்காலத்தைப் பற்றிய பயம் இனிதே விலகும்.

ரிஷப சுக்ரன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 4,9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் ஜூன் 29-ந் தேதி ரிஷபத்தில் சஞ்சரிக்கப் போகிறார். சுக ஸ்தானம் எனப்படும் 4-ம் இடத்திற்கு அதிபதியாக விளங்கும் சுக்ரன், அந்த ஸ்தானத்திலேயே சஞ்சரிக்கும் பொழுது சுகங்களும், சந்தோஷங்களும் வந்து சேரும். பெற்றோர் வழியில் ஆதரவு கிடைக்கும். தாய் வழியில் தனலாபம் உண்டு. வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஒரு சிலருக்கு ஆடை, ஆபரணங்களின் சேர்க்கையும் உண்டு.

கடக புதன் சஞ்சாரம்

இதுவரை 5-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த புதன், தன் சொந்த வீட்டை விட்டு 6-ம் இடத்திற்கு வருவது யோகம்தான். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். மாமன், மைத்துனர்களின் இல்லத்தில் நடைபெறும் மங்கள நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். சேமிப்பு அதிகரிக்கும். நேரம் காலம் பார்க்காமல் உழைப்பவர்களுக்கு உதவுவீர்கள். உத்தியோகத்தில் தடைப்பட்ட உயர்வு, இனிமேல் தானாக வந்து சேரும். வீட்டுப் பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். கூட்டு முயற்சிகள் இதுபோன்ற காலங்களில் கைகொடுக்கும்.

கடக செவ்வாய் சஞ்சாரம்

கடக ராசிக்கு ஜூலை 12-ந் தேதி செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3,10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். கடகத்தில் அவர் நீச்சம் பெறும் பொழுது, சகோதர ஒற்றுமை குறையும். நீங்கள் சார்ந்திருப்பவர்களால் பிரச்சினைகள் உருவாகலாம். தொழில் நடைபெறும் இடத்தை மாற்றலாமா? என்று சிந்திப்பீர்கள். ஒருசிலர் தொழில் நிலையத்தை பழுது பார்க்கும் சூழ்நிலை உருவாகும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். உடன்பிறப்புகளை அரவணைத்துக் கொள்வது நல்லது.

பெண்களுக்கு!

ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் மாதம் இது. அண்ணன், தம்பி அக்கா, தங்கைகளை அனுசரித்துச் செல்வதன் மூலமே ஆதாயம் கிடைக்கும். கோபத்தைக் குறைத்துக் கொண்டு செயல்படுவதன் மூலம் நல்ல வாய்ப்புகளை வரவழைத்துக் கொள்ள முடியும். வாழ்க்கைத் துணை வழியே அடிக்கடி பிரச்சினைகள் வந்து அலை மோதும். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

பிள்ளைகள் படிப்பில் தேர்ச்சி பெற்று நல்ல பெயர் எடுப்பார்கள். பிரயாசை எடுக்காமலேயே பெரிய படிப்பு படிக்க வாய்ப்பு கிடைக்கலாம். உத்தியோகத்தில் சக பணியாளர் களின் ஒத்துழைப்பு கிட்டும். சனிக்கிழமை தோறும் விரதமிருந்து, அதிகாலையில் ஆனைமுகப் பெருமானையும், ஆஞ்சநேயரையும் வழிபடுவது நல்லது.

Comments

comments

Related posts