கன்னி – ஆனி மாத ராசி பலன்கள் (15.6.2017 முதல் 16.7.2017 வரை)

கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் கன்னி ராசி அன்பர்களே!

உங்களின் ஆனிமாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் ராசிநாதன் புதன் பத்தாமிடத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு 3,8 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாயும், விரயாதிபதியான சூரியனும் இணைந்து சஞ்சரிக்கிறார்கள். ராசியிலேயே குருபகவான் சஞ்சரிக் கிறார். எனவே விரயங்கள் கூடும். குடும்பச்சுமை அதிகரித்தாலும் குருபலத்தால் அதைச் சமாளித்து விடுவீர்கள்.

சூரியன் 10-ல் சஞ்சரிப்பதால் அதிகார வர்க்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். அரசு வழிச் சலுகைகளும் எதிர்பார்த்தபடி வந்து சேரும். வீடுகட்ட, வாகனம் வாங்க ஏதேனும் விண்ணப்பம் செய்திருந்தால் அது பரிசீலிக்கப்பட்டு பணம் கைக்கு வந்து சேரலாம். அஷ்டமாதிபதி வலிமை இழப்பது யோகம்தான். சென்ற மாதத்தில் ஏற்பட்ட இழப்புகளை இப்பொழுது ஈடுகட்டுவீர்கள். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் மீண்டும் வந்து இணைவர். உணர்ச்சிவசப்பட்டு பேசி பகையாகிப் போன உறவு, மீண்டும் நட்பாக மாறும்.

தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறியுங்கள். தன்னம்பிக்கையோடு செயல்பட்டு எதிர்கால முன்னேற்றத்திற்கு வழிசெய்து கொள்வீர்கள். ஆளுமை சக்தி அதிகரிக்கும். ஆதாயம் பார்க்காமல்அடுத்தவர்களுக்கு உதவியதன் விளைவாக ஆச்சரியப்படத்தக்க சம்பவம் ஒன்று இல்லத்தில் நடைபெறும். அசுர குருவான சுக்ரன் 8-ல் மறைந்தாலும், அதன் பார்வை 2-ம் இடத்தில் பதிகின்றது. 2-ம் இடமான துலாம் ராசி சுக்ரனுக்குரிய சொந்த வீடாகும். எனவே தன் வீட்டைத் தானே பார்க்கும் சுக்ரனால் வசதிகள் பெருகும். வருமானம் திருப்தி தரும். நகை வாங்குவதில் நாட்டம் செலுத்துவீர்கள்.

3-ம் இடத்தில் சனி வக்ரம் பெற்றிருப்பதால் விபரீத ராஜயோகம் செயல்படப் போகிறது. 6-க்கு அதிபதி சனி வக்ரம் பெறுகிறார். எனவே இடையிடையில் எதிர்பாராத நல்ல திருப்பம் வரலாம். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து சில காரியங்களை முடித்துக் கொடுப்பார்கள். எதிர்காலத்தைப் பற்றிய பயம் அகலும். சாட்சி கையெழுத்திட்டதன் மூலம் ஏற்பட்ட சங்கடங்கள் அகலும்.

வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாளுவீர்கள். பணியாளர் களின் தொல்லை அகலும். பழைய பங்குதாரர்களை விலக்கிவிட்டு புதியவர்களை சேர்க்க முன்வருவீர்கள். இம்மாதம் ஆனித் திருமஞ்சனம் வருகின்றது. அன்யை தினம் நடராஜரை வழிபட்டு வந்தால் இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறும்.

ரிஷப சுக்ரன் சஞ்சாரம்

ஜூன் 29-ந் தேதி ரிஷப ராசிக்குச் சுக்ரன் செல்கிறார். அப்போது உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை அதன் மீது பதிகிறது. எனவே திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். செல்வநிலை ஒருபடி உயரும். பழுதான பழைய வாகனங்களை கொடுத்துவிட்டுப் புதிய வாகனங்களை வாங்குவீர்கள். அதிகாரிகளோடு ஏற்பட்ட பகை மாறும். புதிய பாதை புலப்படும். குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி நீங்கள் தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவல் வந்துசேரும்.

கடக புதன் சஞ்சாரம்

உங்கள் ராசிநாதனும், 10-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்கும் புதனும், லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கப்போகிறார். ஜூலை முதல் தேதி இந்த நிகழ்ச்சி நடைபெறப்போகிறது. எனவே அதன் பிறகு பண மழையிலும், உறவினர்களின் பாசமழையிலும் நனையப் போகிறீர்கள். வெளிநாட்டு யோகம் எண்ணியபடியே வந்து சேரும். புண்ணிய காரியங்களுக்குச் செலவிட முன்வருவீர்கள். முன்னோர்கள் செய்த திருப்பணிகளை முறையாகச் செய்ய வேண்டுமென்று நினைப்பீர்கள்.

கடக செவ்வாயின் சஞ்சாரம்!

ஜூலை 12-ந் தேதி கடக ராசிக்குச் செவ்வாய் செல்கிறார். கடக ராசி செவ்வாய்க்கு நீச்ச வீடாகும். உங்கள் ராசிக்கு 3,8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் வலிமை இழக்கும் பொழுது இழப்புகளை ஈடுசெய்ய பெரிய வாய்ப்புகள் வந்து சேரும். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும். ஊர்மாற்றங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். வாடகை இடத்தில் தொழில் செய்வோர் சொந்த இடத்திற்கு மாறும் சூழ்நிலை உருவாகும். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பணியாளர்களை மாற்றுவதில் மும்முரம் காட்டுவீர்கள். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும்.

பெண்களுக்கு!

குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். கூடப்பிறந்தவர்களால் நன்மை உண்டு. தாய்வழி ஆதரவு தானாக வந்து சேரும். கணவன்- மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். பிள்ளை களின் வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுக் களைப் பெறுவீர்கள். குலதெய்வப் பிரார்த் தனைகளை நிறைவேற்றுவீர்கள். செவ்வாய் நீச்சம் பெறும் நேரம். உங்கள் பெயரில் உள்ள சொத்துகளை கொடுத்து விட்டுப் புதிய சொத்துகள் வாங்க முன்வருவீர்கள். 6-ல் கேது இருப்பதால் பக்கத்து வீட்டாரின் பகையை வளர்த்துக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள். சீரான வாழ்வு அமைய அறுபத்துமூவர் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.

Comments

comments

Related posts