விக்கி – சம்பந்தன் பேச்சுவார்த்தை தோல்வி – முதலமைச்சரை நீக்குவதில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் உறுதி

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் இடம்பெற்ற சமாதான பேச்சுவார்த்தை வெற்றிபெறவில்லை என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரும் தமிழரசு கட்சியின் நடவடிக்கை தொடர்ந்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள வடமாகாண அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனையடுத்து, முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை ஆளும் கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்திருந்தனர்.

இந்நிலையிலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் வடமாகாண முதலமைச்சருக்கும் இடையில் நேற்றைய தினம் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.

சுமார் ஒரு மணி நேரம் வரையில் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில், பிரச்சினை குறித்து இணக்கம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் தமிழரசு கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் அதனை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளதாக அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் இருவர் விடுமுறையில் செல்ல வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டில் இருந்து இறங்கிவர தான் தயார் என இரா.சம்பந்தனிடம் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்திருந்ததாக கூறப்படுகின்றது.

எனினும், தமது அமைச்சுப் பதவிகளை பாதுகாப்பதற்காக இத்தகைய ஓர் இணக்கப்பாட்டுக்கு கட்சி தயாரில்லை என தமிழரசு கட்சி சார்பிலான மாகாண அமைச்சர்களும் உறுப்பினர்களும் நேற்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரும் தமிழரசு கட்சியின் நடவடிக்கை தொடர்ந்துள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

comments

Related posts