முஸ்லிம்கள் தாங்களே பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்கிறார்களாம்

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதப் பிரச்சினைகள் இல்லையென்றும், முஸ்லிம்கள் தாங்களே பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்வதாகவும் இசுர தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

மேல் மாகாண சபையின் மாதாந்த அமர்வு நேற்று நடைபெற்றபோது ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர் பைரூஸ் ஹாஜியார், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தாக்குதல்கள் குறித்து மாகாண சபையில் கண்டன உரையொன்றை ஆற்றினார்.

முஸ்லிம்களின் புனித ரமழான் மாதம் நெருங்கி வரும் நிலையில் ஒருசிலர் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத் தாக்குதல்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

2014ல் அளுத்கமையில் நடைபெற்றது போன்று இனவாதத் தாக்குதல் ஒன்றுக்காக அவர்கள் முயற்சிக்கின்றனர் என்றும் பைரூஸ் ஹாஜியார் குற்றம் சாட்டினார்.

இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் இசுர தேவப்பிரிய, இது மாகாண சபையின் பிரச்சினை இல்லை. இங்கு பேசுவதால் எந்தப் பலனும் இல்லை.

அத்துடன் முஸ்லிம்களின் எந்தவொரு வர்த்தக நிலையமும் தாக்குதலுக்கு உள்ளாகவில்லை. முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத் தாக்குதல்களும் பொய்யான தகவல்களாகும். மகரகம வர்த்தக நிலையம் மின் ஒழுக்கு காரணமாகவே சேதமடைந்துள்ளது.

முஸ்லிம்களே அவர்களுக்குள் பிரச்சினைகளை ஏற்படுத்தி மோதிக் கொள்கின்றனர். இதில் நாங்கள் செய்யக் கூடியது ஒன்றுமில்லை. இனவாதப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றனர். மற்றபடி எங்களால் முஸ்லிம்களுக்கு எந்தவித இடையூறும் இல்லை என்று பதில் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து மாகாண சபை அமர்வில் பிரசன்னமாகியிருந்த முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்புச் செய்திருந்த நிலையில், மாகாண சபை அமர்வை ஒத்திவைக்க நேர்ந்துள்ளது.

Comments

comments

Related posts