கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு விடிவு காலம் பிறந்தது. வடக்கு பட்டதாரிகளுக்கு?

கிழக்கு மாகாண பட்டதாரிகளை ஆசிரியர் வெற்றிடங்களுக்கு உள்வாங்குவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் மாகாண கல்வியமைச்சில் கல்வியமைச்சர், கல்வியமைச்சின் செயலாளர், பிரதம செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இன்று(24) கூட்டமொன்று இடம்பெறவுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

இன்றைய கூட்டத்தின் போது பட்டதாரிகளை உள்வாங்குவதற்கான ​பொறிமுறைக்குறித்து ஆராய்ந்து பாடங்களின் அடிப்படையில் எவ்வாறு பட்டதாரிகளை இணைத்துக் கொள்வது தொடர்பிலும் ஆராயப்படவுள்ளளது.

முதற்கட்டமாக எத்தனை பட்டதாரிகளை இணைத்துக் கொள்வது மற்றும் விண்ணப்பங்களை கோருவதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும், எந்த எந்த பாடங்களுக்கு பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பம் கோருவது என்பது தொடர்பிலும் இதன் போது தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானத்துக்கு அமைவாக கட்டம் கட்டமாக பட்டதாரிகளை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அத்துடன் பட்டதாரிகளை ஆசிரியர் வெற்றிடங்களுக்கு உள்வாங்குவதற்காக கல்விப் பணிப்பாளரால் கடந்த சில நாட்களாக திரட்டப்பட்ட தரவுகள் நேற்று முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டதுடன் அதற்கமைவாகவே கிழக்கின் ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

இதனடிப்படையில் எதிர்வரும் நாட்களுக்குள் பட்டதாரிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.

இதன் போது முடிந்தளவு அனைத்து பட்டதாரிகளையும் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் இதன் போது பட்டதாரிகளை உள்வாங்குவதற்கான வயதெல்லையை 45 ஆக அதிகரிக்க அமைச்சரவையில் தீர்மானித்துள்ளதுடன் இதற்கு ஆளுநரின் அனுமதியை பெறவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது,

அத்துடன் வெட்டுப் புள்ளிகளை குறைத்து பட்டதாரிகளை உள்வாங்கவும் பட்டதாரிகளை உள்வாங்கியதன் பின்னர் குறித்த பாடங்களுக்கு மேலும் வெற்றிடங்கள் மீதமாயிருந்தால் அவர்களை பரீட்சையின்றி உள்வாங்கவும் நடவடிக்கை எடுக்க கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தீர்மானித்துள்ளார்,

முடிந்தளவு இலகுவாக பட்டதாரிகளை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளை முழுமையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் பட்டதாரிகளின் விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியதுடன் அதன் போது அவர் இரண்டு வாரங்களில் இந்தப் பிரச்சினை தொடர்பில் சாதகமான நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதியளித்தார்.

இதையடுத்து பிரதமரின் வாக்குறுதிக்கு இணங்க கடந்த மார்ச் மாதம் 14 ஆம் திகதி பிரதமரின் ஆலோசகர் ஆர் பாஸ்கரலிங்கம் தலைமையில் கிழக்கு முதலமைச்சர், கல்வியமைச்சர் மற்றும் மத்திய அரசின் கல்வியமைச்சின் செயலாளர், நிதி ஆணைக்குழுவின் செயலாளர்,தேசிய முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் உட்பட பல உயர் அதிகாரிகள் தலைமையில் கூட்டமொன்று இடம்பெற்றது.

இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் உள்ள வெற்றிடங்கள் தொடர்பான முழுமையான தகவல்களை இரண்டு வாரங்களுக்குள் வழங்குமாறு கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளருக்கு பிரதமரின் ஆலோசகர் இதன் போது பணிப்புரை விடுத்தார்.

இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி கல்விப் பணிப்பாளரினால் கிழக்கு மாகாணத்தின் முழுமையான வெற்றிடங்கள் அடங்கிய ஆவணங்கள் தேசிய முகாமைத்துவ திணைக்களம் மற்றும் நிதி ஆணைக்குழுவுக்கு கையளிக்கப்பட்டன.

இதனையடுத்து கடந்த மே மாதம் 4 ஆம் திகதி தேசிய முகாமைத்துவ திணைக்களம் கிழக்கின் 4784 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப அனுமதி வழங்கியதை கிழக்கு மாகாண முதலமைச்சர் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

இந்நிலையில் நிதி ஆணைக்குழவின் அனுமதி தாமதமாகியதை அடுத்து முதலமைச்சர்களின் மாநாட்டில் ஜனாதிபதியை சந்தித்த கிழக்கு முதலமைச்சர் குறித்த நியமனங்களுக்கான நிதியை வழங்க ஆவண செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments

Related posts