யாழ் பஸ் நிலையத்தில் இளம் பெண்களுடன் ரவுடிகள் அங்க சேட்டை – தட்டிக்கேட்ட நடத்துனருக்கு அடி உதை

யாழ்.மத்திய பேருந்து நிலைய தரிப்பிடத்தில் மாணவிகளுடன் தகராறு செய்த இளைஞர்களை தட்டிக்கேட்ட நடத்துநர் மீது குறித்த இளைஞர் குழுவினர் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் சிறு பதற்ற நிலை ஏற்பட்டதுடன் தாக்குதல் சம்பவம் தொடர்பில் யாழ் பொலிஸ் நிலையத்தில் நேற்றைய தினம் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பாக தெரிய வருகையில்,நேற்றைய தினம் காலை யாழ் பேருந்து தரிப்பிடத்தில் இளைஞர்கள் சிலர் கூடி இருந்துள்ளனர்.

அதேநேரம் தனியார் கல்வி நிலையங்களில் கல்வி கற்கும் இளம் பெண் பிள்ளைகள் அப்பகுதியால் சென்று கொண்டிருந்துள்ளனர்.

இதன்போது அங்கு நின்ற இளைஞர்கள் தகாத வார்த்தைகளை பிரயோகித்ததுடன் ஒருவர் மேல் ஒருவரை தள்ளிவிட்டு அங்க சேட்டைகளிலும் ஈடுபட்ட வண்ணம் இருந்துள்ளனர்.

இதனை அவதானித்த இ.போ.ச பேருந்து நடத்துநர் ஒருவர் அப்பகுதியில் நின்ற இளைஞர்களை எச்சரித்து அப்பகுதியில் இருந்து விலகிச் செல்லுமாறு கூறியுள்ளார்.

அப்போது அவரை எதிர்த்து விட்டு சென்ற இளைஞர்கள் சிறிது நேரத்தின் பின்னர் மேலும் சில இளைஞர் குழுக்களை இணைத்துக்கொண்டு அப்பகுதிக்கு வந்து குறித்த நடத்துநருடன் தகராற்றில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர்.

ஏனையவர்கள் ஓடிவந்து அவர்களை பிடிக்க முற்பட்ட வேளை தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தப்பி சென்றுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் சில மணி நேரம் பதற்றநிலை ஏற்பட்டது. நேற்றைய தினம் சனிக்கிழமை என்பதால் அதிகளவான மாணவர்கள் தனியார் கல்வி நிலையங்களில் கல்வி கற்பதற்காக பல இடங்களில் இருந்தும் யாழ்.நகருக்கு வருகின்ற சூழலில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பேருந்து தரிப்பிடத்தில் முழு நேரமும் பொலிஸார் கடமையில் ஈடுபட்டால் மாத்திரமே இவ்வாறான் சமூக சீர்கேட்டுச் செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியும் எனவும் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்து கொள்ள முடியும் எனவும் குறித்த சம்ப வத்தை நேரில் அவதானித்தவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: valampuri news paper

Comments

comments

Related posts

Leave a Comment