தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தினப் பிரகடனம் வலியுறுத்தும் 15 கோரிக்கைகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தினப் பிரகடனத்தில் 15 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை பொறுப்பேற்றுக் கொண்ட விடயங்கள் அனைத்தையும் முழுமையாகத் துரிதகதியில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே பிரகடனத்தின் முதலாவது கோரிக்கையாகும்.

சுயநிர்ணய அடிப்படையில் இணைந்த வடக்குக் கிழக்கில் கூட்டாட்சி முறைமைக்கு, முழுமையான அதிகாரப் பங்கீடு கிடைக்கும் படியான அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

உத்தேச பாராளுமன்றத் தேர்தல் முறையில் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் பாதிப்புறாத வகையிலும், போர்ச்சூழல் காரணமாகக் குறைந்துள்ள தமிழ் மக்கட்தொகையானது, அவர்தம் பிரதிநிதித்துவத்தைக் குறைக்காது அதனை ஈடு செய்யும் வகையிலும் ஒழுங்குகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது

காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான தீர்வு துரிதப்படுத்தப்பட வேண்டும் எனவும், அரசால் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் எனவும் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான பணியகச் சட்டம் விரைந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர, தமிழ் அரசியற்கைதிகள் விடுதலை, பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படுதல், பாதுகாப்புத் தரப்பினர் வசமுள்ள தமிழ், முஸ்லிம் மக்களின் நிலங்களை விடுவித்தல் போன்ற கோரிக்கைகளும் அந்த பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

வடக்கு, கிழக்கில் வேலையற்ற பட்டதாரிகளுக்கான தொழில் வாய்ப்புக்கேற்ற வகையில் கல்விக்கொள்கை சீரமைப்புச் செய்யப்பட வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது

முன்னாள் போராளிகள் சமூகத்தில் மீளிணைக்கப்படும் செயற்பாடு சீரான முறையில் நடைபெற வேண்டும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

Comments

comments

Related posts

Leave a Comment